இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா, ஆஸ்திரேலியாவில் குடியேறுகிறார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா. 35 வயதான இவர், உலகக் கோப்பைத் தொடருடன் ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. ஆனால், அவர் ஓய்வு அறிவிப்பை வெளியிடவில்லை. இந்நிலையில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி, வரும் 26 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த தொடரில் பங்கேற்கும் மலிங்கா, அதற்கு பிறகு தனது ஓய்வு முடிவை அறிவிக்கிறார். பின்னர் அவர் இலங்கையில் இருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் குடியேற இருக்கிறார். அதற்காக அங்கு வீடு ஒன்றை வாங்கியுள்ளார். உலகக் கோப்பைக்குப் பிறகு நேரடியாக ஆஸ்திரேலியா சென்ற அவர், நாளைதான் இலங்கை திரும்புகிறார்.
ஓய்வுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் பயிற்சியாளர் பணியை மலிங்கா மேற்கொள்ள இருப்பதாகவும் இதற்காக தனது நண்பர்கள் சிலரிடம் அவர் பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது.