நான் விளையாடிய காலக்கட்டத்தில் இப்போது ரோகித் சர்மா பேட் செய்வதுபோல விளையாட நினைத்தேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
"இந்தியா டுடே" நாளிதழுக்கு பேட்டியளித்த சுனில் கவாஸ்கர் "ஒரு நாள் போட்டிகளிலும் டெஸ்ட் போட்டிகளில் கூட ரோகித் சர்மா தான் சந்திக்கும் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டுவார். அப்படிப்பட்ட ஒரு பேட்டிங்கைதான் நானும் அப்போது விளையாட நினைத்தேன்" என்றார். இந்தியாவுக்காக 125 டெஸ்ட் போட்டிகளிலும், 109 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியவர் சுனில் கவாஸ்கர்.
மேலும் அந்தப் பேட்டியில் "அப்போதிருந்த சூழ்நிலையும் என் மீதிருந்த நம்பிக்கை குறைவும் ரோகித் சர்மா போல என்னால் அப்போது விளையாட முடியாமல் போனது. ஆனால் என்னுடைய அடுத்த தலைமுறை வீரர்கள் இப்படி விளையாடுவதை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களின் ஆட்டத்தை பார்ப்பதற்கே அலாதியாக இருக்கிறது. இப்போது இவர்கள் இன்னொரு தலைமுறைக்கு உதாரணமாக இருக்கிறார்கள்" என்றார் சுனில் கவாஸ்கர்.