இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு அனில் கும்ப்ளே மறுபடியும் புதிதாக விண்ணப்பித்துள்ளார்.
பயிற்சியாளர் பதவிக்கான தேர்வில், கும்ப்ளே விண்ணப்பிக்காமல் நேரடியாக பங்கேற்பார் என கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்த நிலையில் அவர், முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு பயிற்சியாளராக பொறுப்பேற்ற கும்ப்ளேவின் பதவிக்காலம் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருடன் முடிவடைகிறது. அனில் கும்ப்ளே பயிற்சியின் கீழ் இந்திய அணியின் செயல்பாடு சிறப்பாக இருந்தபோதிலும், கேப்டன் விராட் கோலியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுவது, அவருக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. கும்ப்ளேவைத் தவிர்த்து, வீரேந்திர சேவாக், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டாம் மூடி உள்ளிட்டோரும் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கான போட்டியில் உள்ளனர். சச்சின், கங்குலி, லட்சுமணன் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் குழு, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரைத் தேர்வு செய்கிறது.