விளையாட்டு

கோலி அரைசதம் விளாசி அசத்தல்! பாகிஸ்தானுக்கு 182 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி!

ச. முத்துகிருஷ்ணன்

துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு துவங்கி நடைபெற்று வரும் ஆசிய கோப்பை டி20 தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றின் 2வது ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மீண்டும் பலப்பரீட்சையில் இறங்கியுள்ளன. லீக் சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தது. தற்போது, 2-வது முறையாக மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியின் ஓப்பனர்களாக கே.எல்.ராகுல், ரோகித் ஷர்மா ஆகியோர் களமிறங்கினர். வழக்கம்போல தடுப்பாட்ட பாணியை கே.எல்.ராகுல் கையில் எடுக்க, அதிரடி ஆட்டத்தை கேப்டன் ரோகித் ஷர்மா கையிலெடுத்து பொறுப்பாக விளையாடத் துவங்கினார். 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை விளாசி ரோகித் ஷர்மா அமர்க்களப்படுத்த, மறுபக்கம் ராகுலும் 2 சிக்ஸர்களை விளாசி அசத்த, ஸ்கோர் 5 ஓவர்களுக்குள் 50 ரன்களை அசால்ட்டாக கடந்தது.

ஆனால் 6வது ஓவரின் முதல் பந்தில் ஹரிஸ் ரவுஃப் பந்துவீச்சில் ரோகித் 28 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுக்க, அடுத்ததாக விராட் கோலி களமிறங்கினார். அடுத்த ஓவரிலேயே ராகுலும் சப்தப் கான் ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்ட, பெரும் எதிர்பார்ப்புடன் சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். ஆனால் இம்முறை அதிரடி ஆட்டத்தை விராட் கோலி கையில் எடுத்து, எதிர்கொண்ட பந்துகளை பவுண்டரி நோக்கி பலமாக விரட்ட துவங்கினார்.

13 ரன்களில் சூர்யா நடையைக் கட்ட, 14 ரன்களில் ரிஷப் பண்டும் விக்கெட்டை பறிகொடுக்க களத்தில் தனியாளாக போராடினார் விராட் கோலி. அதிரடி வீரர் ஹர்திக் பாண்ட்யா டக் அவுட்டாக, 16 ரன்களில் தீபக் ஹூடா பெவிலியன் திரும்ப, கோலி மட்டும் நிலைத்து நின்று ஏதுவான பந்துகளை மட்டும் எல்லைக்கோட்டுக்கு விரட்டி அணியின் ஸ்கோர் உயர உதவிபுரிந்தார். 36 பந்துகளில் அரைசதம் கடந்து நம்பிக்கை அளிக்கும் வகையில் களத்தில் இருந்தார் கோலி.

அடுத்து புவனேஷ்வர் குமார் களமிறங்க, கோலிக்கு ஸ்டிரைக்கில் நீடிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக கடைசி ஓவரில் அவர் சிங்கிள் எடுப்பதைக் கூட தவிர்த்தார். அடுத்த சிங்கிளுக்கான வாய்ப்பின் கோலி 2 ரன் எடுத்து ஸ்டிரைக்கிற்கு மீண்டும் வர முயன்றபோது, துரதிர்ஷ்டவசமாக அவுட்டானார். 44 பந்துகளை சந்தித்து 60 ரன்கள் குவித்த நிலையில் களத்தில் இருந்து வெளியேறினார் கோலி. அடுத்து வந்த பிஷ்னோய் 2 பவுண்டரிகள் விளாசி அசத்த், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களை இந்திய அணி குவித்தது. தற்போது 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி விளையாட உள்ளது.