ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது பாதி ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியும் மோதுகிறது.
இந்தப் போட்டி புகழ்ப்பெற்ற ஷார்ஜா மைதானத்தில் நடைபெறுகிறது. இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளில் சிஎஸ்கே அணி 8 ஆட்டங்களில் 6 வெற்றி, இரண்டு தோல்வியுடன் மொத்தம் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2 ஆம் இடத்தில் இருக்கிறது. ஆர்சிபி அணி 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளிகளுடன் பட்டியலில் 3 ஆம் இடத்தில் இருக்கிறது. அமீரகத்தில் தெடர்ந்த ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தி மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்குகிறது சிஎஸ்கே.
முதல் போட்டியில் டூப்ளசிஸ், மொயின் அலி, தோனி, சுரேஷ் ரெய்னா ஆகியோர் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் ருதுராஜ் கெய்க்வாட், டுவைன் பிராவோ ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். அம்பத்தி ராயுடு காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் ஆகி வெளியேறினார். சிஎஸ்கேவின் பவுலிங்கை பொருத்தவரை ஹேசல்வுட், தீபக் சஹார், பிராவோ ஆகியோர் சிறப்பான பங்களிப்பை கொடுத்தனர். காயமடைந்த அம்பத்தி ராயுடுவுக்கு ‘எக்ஸ்ரே’ பரிசோதனையில் எலும்பு முறிவு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. ஆனாலும் வீக்கம் உள்ளது. அவர் உடல்தகுதியை எட்டாவிட்டால் ராபின் உத்தப்பா இடம் பெறலாம்.
ஆர்சிபி அணி முதல் போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி வெறும் 92 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. கேப்டன் விராட் கோலி, டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் ஆகிய நட்சத்திர வீரர்கள் ஜொலிக்கவில்லை. இதே போல் பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல், கைல் ஜாமிசன், முகமது சிராஜ், ஹசரங்கா தாக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புடன் விளையாட வேண்டும். இவ்விரு அணிகளும் ஏற்கெனவே இந்தியாவில் நடைபெற்ற முதற்கட்ட லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.