விளையாட்டு

கோலி, ரோகித் அதிரடி சதத்தால் இந்திய அணி 375 ரன்கள் குவிப்பு

கோலி, ரோகித் அதிரடி சதத்தால் இந்திய அணி 375 ரன்கள் குவிப்பு

rajakannan

இலங்கை அணிக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மாவின் அதிரடி சதத்தால் இந்தியா 375 ரன்கள் குவித்தது.

கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தவான் 4 ரன்களில் ஆட்டமிழந்தாலும், ரோகித் சர்மா, கேப்டன் விராட் கோலி இணைந்து இலங்கை வீரர்களின் பந்து வீச்சை அடித்து நொறுக்கினர். 

அதிரடியாக விளையாடிய விராட் கோலி, 76 பந்துகளில் சதம் விளாசினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 96 பந்துகளில் 131 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதில், 2 சிக்ஸர்களும், 17 பவுண்டரிகளும் அடங்கும். கோலி ஆட்டமிழந்த போது, இந்திய அணி 29.3 ஓவரில் 225 ரன்கள் எடுத்து இருந்தது. ரோகித்-கோலி ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 219 ரன்கள் சேர்த்தது. 

பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா நிதான ஆட்டத்தை வெளிபடுத்த ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 85 பந்துகளில் சதம் அடித்தார். இதனையடுத்து, மேத்யூஸ் வீசிய 35-வது ஓவரில் பாண்டியா(19), ரோகித் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ரோகித் 88 பந்துகளில் 3 சிக்ஸர் 11 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய கே.எல்.ராகுல் 7 ரன்களில் நடையைக் கட்டினார். அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் விழுந்ததால் இந்திய அணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது. 

இதனையடுத்து, மணிஷ் பாண்டே, தோனி இருவரும் ஜோடி சேர்ந்து நிதானமாக ரன்களை சேர்த்தனர். 42.4 ஓவர்களில் இந்திய அணி 300 ரன்கள் சேர்த்தது. தோனி, மணிஷ் பாண்டேவின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இறுதியில் இந்திய அணி 50 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 375 ரன்கள் குவித்தது. மணிஷ் பாண்டே 42 பந்துகளில் அரை சதம் அடித்தார். தோனி 49 ரன்கள் எடுத்து  ஒரு ரன்னில் அரைசதத்தை நழுவவிட்டார். தோனி, மணிஷ் ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில், மேத்யூஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தார். மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் ரன்களை வாரி வழங்கினர். 

5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி முதல் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதனால் இந்திய அணிக்கு இந்த போட்டியின் முடிவு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. 

ஆனால், இதிலும், அடுத்த போட்டியிலும் வென்றால்தான் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இடம்பெற முடியும் என்ற நிலை இலங்கை அணிக்கு உள்ளது. அதனால், இந்த போட்டியில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் இலங்கை அணி உள்ளது. 376 ரன்கள் இலக்கு என்பதால் இலங்கை அணிக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.