கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் படும் துன்பங்களைக் கண்டு எங்களது இதயமே உடைந்துவிட்டது என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவியைத் தருமாறு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். பேரிடர்களின்போது மக்களைக் காக்க இதுபோன்ற நிதியுதவி உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க நீண்ட கால அடிப்படையில் தங்களின் நிதியுதவி உதவும் என்றும் இதற்காக அனைத்து தரப்பு மக்களும் தங்களால் இயன்ற நிதியை வழங்கப் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
இதனையடுத்து பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ரூ.25 கோடி, டாடா குழுமம் ரூ.1500 கோடி, பிசிசிஐ அமைப்பு ரூ.51 கோடியும் நிதியுதவி அளித்துள்ளது. கிரிக்கெட் வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் ரூ.51 லட்சமும், சுரேஷ் ரெய்னா ரூ.52 லட்சமும், இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் ரஹானே ரூ.10 லட்சமும் பிரதமர் மற்றும் தங்களது மாநில நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கியுள்ளனர்.
இப்போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், அவரது மனைவியுமான அனுஷ்கா சர்மாவும் தொகையைக் குறிப்பிடாமல் பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கியுள்ளனர். இது குறித்து தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்ட கோலி "நானும் அனுஷ்காவும் பிரதமர் மற்றும் மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு நிதி அளிக்கிறோம். கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் படும் அவதிகளைக் காணும்போது எங்கள் இதயம் உடைந்துபோகிறது. அவர்களுக்கு எங்களால் முயன்ற உதவிகளைச் செய்கிறோம். இது ஏதேனும் ஒருவகையில் மக்களின் துயர் தீர்க்க பயன்படும் என நம்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி, அனுஷ்கா தம்பதியினர் நிவாரண தொகையைக் குறிப்பிடாவிட்டாலும் ரூ.3 கோடி நிதியளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.