இந்திய முன்னாள் கேப்டன் தோனிக்கு இறுதியாக பெரிய ஃபேர்வெல் போட்டி நடத்த வேண்டும் என இந்திய பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான கே.எல்.ராகுல், ஒரு ஃபேர்வெல் போட்டி கூட இல்லாமல் தோனி ஓய்வுபெற்றது மனதை உடைக்கும் செய்தியாக இருப்பதாகவும், அதிர்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ இணையத்தில் அவர் கூறும்போது, “எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி இது. உண்மையில் மனது உடைந்துவிட்டது. இந்திய அணியில் இருக்கும் அனைவரும், தோனியின் தலைமையில் விளையாடி வீரர்களும், அவருடன் விளையாடி வீரர்களும் கண்டிப்பாக அவருக்கு ஒரு பெரிய ஃபேர்வெல் போட்டி நடத்தி விடைபெறச் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். தோனியுடன் இறுதிப்போட்டியில் விளையாடியது எனக்கு தனிச்சிறப்பு” என்றார்.
முன்னதாக, கடந்த சுதந்திர தினத்தன்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி திடீரென தனது ஓய்வை அறிவித்தார். கிரிக்கெட் உலகை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே இந்த செய்தி குமுற வைத்தது. சமூக வலைத்தளங்கள் தோனியின் ட்ரெண்டிங்கில் மிதந்தன. கிரிக்கெட் வீரர்கள், அரசியல்வாதிகள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் தோனியின் ஓய்வு முடிவிற்கு வருத்தங்களை தெரிவித்தனர்.