விளையாட்டு

குழந்தைகளுக்காக நிதி திரட்டிய கே.எல். ராகுல் !

jagadeesh

குழந்தைகள் நலனுக்காக தன்னுடைய கிரிக்கெட் உபகரணங்களை ஏலம்விட்டு ரூ.8 லட்சம் திரட்டியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல்.

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக திகழ்கிறார் கே.எல்.ராகுல். ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடர்களில் மிகப் பிரமாதமாக விளையாடி சாதனைப் படைத்து வருகிறார் அவர். அதுவும் இந்தாண்டு நியூசிலாந்து தொடரில் பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் கீப்பராகவும் அசத்தினார் ராகுல். பெங்களூரைச் சேர்ந்த ராகுல் சமூகப் பணிகளிலும் தன்னை அர்ப்பணித்து வருகிறார்.

இந்நிலையில் கே.எல்.ராகுல் தான் பயன்படுத்திய பேட்டை ரூ.2,64,228க்கும், தான் அணிந்த டெஸ்ட் போட்டியின் ஜெர்சியை ரூ.1,32,774க்கும், ஒருநாள் போட்டியின் ஜெர்சியை ரூ.1,13,240க்கும், தன்னுடைய ஹெல்மெட்டை ரூ.1,22,677க்கும், டி20 போட்டிகளில் அணிந்த ஜெர்சியை ரூ.1,04,824க்கும் ஏலம் விட்டுள்ளார். இதன் மூலம் ரூ.7,99,553 கிடைத்துள்ளது. இதனை குழந்தைகள் நலன் காக்கும் அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கே.எல்.ராகுல் "நான் என்னுடைய கிரிக்கெட் உபகரணங்களை பாரத் ஆர்மி அமைப்புடன் ஏலத்தில் விட தீர்மானத்தேன். இதன் மூலம் கிடைக்கும் வருவாய் குழந்தைகள் நலனுக்கான அறக்கட்டளைக்கு செல்லும். இது மிகவும் முக்கியமானது. கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக பல குழந்தைகள் உணவின்றி தவித்து வருகின்றனர். இந்த ஏலம் மூலம் மற்றவர்களும் குழந்தைகளுக்கு உதவும் வாய்ப்பு கிடைக்கும் என்பதாலேயே இதனை செய்தேன். இந்தக் கொரோனா காலத்தில் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்" என கூறியுள்ளார்.