விளையாட்டு

விலங்குகள் மீது இவ்வளவு நேசமா..? - நெகிழவைத்த கே.எல்.ராகுலின் செயல்..!

விலங்குகள் மீது இவ்வளவு நேசமா..? - நெகிழவைத்த கே.எல்.ராகுலின் செயல்..!

webteam

2-வது ஒருநாள் ஆட்டத்தில் தனக்குக் கிடைத்த ஆட்ட நாயகனுக்கான பரிசுத்தொகையை சென்னை விலங்குகள் மருந்தகத்திற்கு இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் வழங்கியுள்ளார்.

ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் சிறப்பான பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கிங்காக கே.எல்.ராகுலுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இதில் பரிசுத் தொகையாக ஒரு லட்சம் ரூபாயை கே.எல்.ராகுல் பெற்றார்.

இந்நிலையில், தனக்குக் கிடைத்த பரிசுத்தொகையுடன் சேர்த்து மேலும் கூடுதலாக ஒரு லட்சத்தை சேர்த்து ரூ. 2 லட்சத்தை சென்னை பெசண்ட் நகரில் உள்ள விலங்குகள் சிகிச்சை மையத்துக்கு உதவித்தொகையாக கே.எல்.ராகுல் அளித்துள்ளார். விலங்கு உரிமை ஆர்வலரும் கே.எல்.ராகுலின் நண்பருமான ஸ்ரவன் கிருஷ்ணன் தன்னுடைய ஃபேஸ்புக்கில் இந்த தகவலை பதிவிட்டுள்ளார்.

இரண்டு வாரத்திற்கு முன்பு ஷ்ரவன் கிருஷ்ணன் தனது நண்பர் கே.எல்.ராகுலிடம் பேசியுள்ளார். அப்போது விலங்குகள் நலனுக்காக பண உதவி செய்வதாக கே.எல்.ராகுல் அவரிடம் உறுயளித்ததாக தெரிகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஆட்டநாயகன் விருதை பெற்ற நிலையில், தான் உறுதியளித்தபடி பணத்தை அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து ஷ்ரவன் கூறுகையில், “ஆட்டநாயகன் விருதினை வென்ற உடனேயே அவர் பணத்தை அனுப்புவார் என்று எனக்குத் தெரியும். ஆனால் என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம் என்னவென்றால், அவர் வென்றதை விட இருமடங்கு தொகையை அனுப்பியுள்ளார். அவர் மொத்தம் ரூ. 2 லட்சத்தை பெசன்ட் நினைவு விலங்கு மருந்தகத்திற்கு அனுப்பியுள்ளார்.

ராகுலும் நானும் எப்போதுமே தொடர்பில் இருக்கிறோம். காயமடைந்த விலங்குகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடும்போது அவற்றைப் பார்ப்பது கூட கடினமாக இருக்கும் என்று அவர் என்னிடம் கூறுவார். தன்னால் மையத்திற்கு வந்து உதவ முடியாது, ஆனால் எந்தவொரு நிதியுதவிக்கும் அவரை தொடர்பு கொள்ள வேண்டும் என என்னிடம் சொல்வார். விலங்குகளுக்கான மருத்துவ பராமரிப்பு, விலங்குகளை மீட்பது, விலங்குகளுக்கு பேரழிவு உதவி மற்றும் தடுப்பூசி திட்டங்களுக்காக இந்த பணம் பயன்படுத்தப்படும். கிரிக்கெட் வீரர் விலங்குகள் மீதான தனது அன்பை வெளிப்படுத்தியது இது முதல் முறை அல்ல. நீங்கள் செய்யும் வேலைக்கு உங்கள் நெருங்கிய நண்பர்களின் ஆதரவைப் பெறுவது மிகவும் அற்புதமான உணர்வு. கே.எல். ராகுலும் நானும் U-17 மாநில கிரிக்கெட் நாட்களில் இருந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்களாக இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து பெசன்ட் நினைவு விலங்குகள் சிகிச்சை மையம் தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது. அதில், “எங்களுக்கு கே.எல். ராகுல் ரூ. 2 லட்சம் உதவித்தொகை அளித்துள்ளார். இப்போது மட்டும் அவர் உதவவில்லை. எப்போதும் எங்களுக்கு ஆதரவாக உள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.