ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா அணி கடந்த லீக் போட்டியில் ரஸலின் அதிரடியால் 200 ரன்களுக்கு மேலான ஸ்கோரை எளிதாக சேஸ் செய்து வெற்றிப் பெற்றது. அதேபோல ராஜஸ்தான் அணியும் கடந்தப் போட்டியில் பட்லர் மற்றும் ஸ்ரேயஸ் கோபால் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் பெங்களுர் அணியை வீழ்த்தியது.
கொல்கத்தா அணியை பொருத்தவரை இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி மற்றும் ஒரு தோல்வி அடைந்துள்ளது. அந்த அணியின் ரஸல் அதிரடியில் கலக்கி வருகிறார். உத்தப்பா மற்றும் ரானா ஒரளவு பேட்டிங்கில் செயல்படுகின்றனர். ஆனால் தொடக்க ஆட்டக்காரான கிறிஸ் லின் மற்றும் கேப்டன் தினேஷ் கார்த்திக் ஆட்டம் மந்தமாகதான் உள்ளது. இவர்கள் இருவரின் ஃபார்ம் அணிக்கு கவலை தரும் விஷயமாக உள்ளது. எனவே இன்று நடைபெறும் போட்டியில் இவர்கள் சாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் ரஸலின் அதிரடி தொடர்ந்தால் இந்தப் போட்டி ரசிகர்களுக்கு சிறப்பான விருந்தாக அமையும்.
ராஜஸ்தான் அணியில் பட்லர் மற்றும் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடிவருகின்றனர். கேப்டன் ரஹானேவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் இந்த அணியில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா வீரர் ஸ்மித் சொதப்பிவருகிறார். அதேபோல பென் ஸ்டோக்ஸ் ஆட்டமும் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை. பந்துவீச்சில் கோபால் சென்ற போட்டியில் கலக்கினார். மற்ற பந்தவீச்சாளர்கள் பெரிதும் சொப்பிக்கவில்லை. அதனால் இன்று நடைபெறும் போட்டியில் ரஸலின் அதிரடியை ராஜஸ்தான் அணி எவ்வாறு தடுப்பார்கள் என்று பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. கொல்கத்தா அணியில் ஹாரி கார்னி சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல ராஜஸ்தான் அணியில் சுதேசன் மிதுன் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 19 போட்டிகளில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியுள்ளது. அதில் இரு அணிகளும் தலா 9 போட்டியில் வெற்றிப் பெற்றுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை. இதனால் இன்று நடைபெறும் அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.