விளையாட்டு

அதிரடி காட்டிய லின் - 4 விக்கெட் சாய்த்த இம்ரான்

அதிரடி காட்டிய லின் - 4 விக்கெட் சாய்த்த இம்ரான்

rajakannan

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 161 ரன்கள் எடுத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பந்துவீச தீர்மானித்தார். முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் கிறிஸ் லின், சுனில் நரைன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடக்கம் முதலே லின் அதிரடி காட்டினார். பவுண்டரிகளாக விளாசினார். நரைன் 2 ரன்னில் ஆட்டமிழந்த போது லின் தனது அதிரடியை குறைக்கவில்லை. சென்னை வீரர்களின் பந்துவீச்சை சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசி அவர் துவம்சம் செய்தார். 

இருப்பினும், ரானா 21, உத்தப்பா 0 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடி வந்த லின் 51 பந்தில் 82 ரன்கள் விளாசி இம்ரான் தாஹிர் பந்துவீச்சில் அவுட் ஆனார். இருப்பினும், அதிரடி ஆட்டக்காரர் ரஸ்ஸல் களமிறங்கினர். வந்த வேகத்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசினார். அதனால், கொல்கத்தா அணி 200 ரன்கள் எட்டும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், இம்ரான் ஓவரிலே ரஸ்ஸல் ஆட்டமிழந்தார். 

ரஸ்ஸல் ஆட்டமிழந்ததும் ரன் வேகம் குறைந்தது. தினேஷ் கார்த்திக் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. இம்ரான் தாஹிர் அற்புதமாக பந்துவீசி 4 விக்கெட் சாய்த்தார். அதேபோல், தாக்கூர் கச்சிதமாக பந்துவீசி 4 ஓவரில் 18 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட் சாய்த்தார்.

இந்தப் போட்டியில் டு பிளிசிஸ் 4 கேட்ச் பிடித்தார். லின்னை தவிர கொல்கத்தா அணியில் மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். 162 ரன் என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடி வருகிறது. அந்த அணியில் வாட்சன் 6 ரன்னில் ஆட்டமிழந்து மீண்டும் சொதப்பினார். 4 ஓவர் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்துள்ளது.