விளையாட்டு

“விக்கெட்டை அன்பளிப்பு கொடுப்பது போல அள்ளி கொடுத்துவிட்டார்கள்” - கொல்கத்தாவை சாடிய லாரா!

“விக்கெட்டை அன்பளிப்பு கொடுப்பது போல அள்ளி கொடுத்துவிட்டார்கள்” - கொல்கத்தாவை சாடிய லாரா!

EllusamyKarthik

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் சீசனின் ஐந்தாவது லீக் போட்டியில் மும்பை இன்டியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. அதில் மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில் கொல்கத்தா பேட்ஸ்மேன்களின் கவனக்குறைவு தான் தோல்விக்கு காரணம் என தெரிவித்துள்ளார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் ஜாம்பவானுமான பிரையன் லாரா. 

“சரியான பவுலர்களை சரியான இடத்தில் பந்துவீச செய்ததன் மூலம் மும்பை அணி வெற்றி பெற்றது. அதனால் இரண்டாவது இன்னிங்ஸில் பேட் செய்த கொல்கத்தா நெருக்கடியை எதிர்கொண்டது. சென்னை மைதானம் ஸ்லோ டிரேக். அந்த ஆடுகளத்திற்கு ஏற்ற வகையில் தான் விளையாட வேண்டும். களத்திற்கு வந்ததும் பேட்ஸ்மேன்கள் தங்களுக்கு பிடித்த ஷாட்களை ஆடி ரன் குவிக்கின்ற மைதானம் அல்ல இது. அதனால் ஆடுகளத்தின் தன்மையை அறிந்து அதற்கு உகந்தபடி விளையாட வேண்டும். 

நீங்கள் அப்படி நினைத்தது தவறு. நல்ல தொடக்கம் கிடைத்து விட்டது. இனி வெற்றி தான் என எண்ணியது தவறு. நிதானமாக கவனத்துடன் சென்சிபிள் கிரிக்கெட் விளையாடி இருக்க வேண்டும். லெக் ஸ்பின்னர் இடது கை பேட்ஸ்மேன்களை வீழ்த்துவது எல்லாம் வழக்கமானது அல்ல. இது முழுக்க முழுக்க கொல்கத்தா பேட்ஸ்மேன்களின் கவனக்குறைவுதான். அதுவே அவர்களுக்கு தோல்வியை தந்துவிட்டது. விக்கெட்டை ஏதோ அன்பளிப்பு கொடுப்பது போல அள்ளி கொடுத்து விட்டார்கள்” என விமர்சித்துள்ளார் லாரா. 

153 எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்கை விரட்டிய கொல்கத்தா அணி கடைசி ஐந்து ஓவர்களில் வெறும் 20 ரன்களை மட்டுமே குவித்தது கொல்கத்தா என்பதும் குறிப்பிடத்தக்கது.