ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை கோப்பைகளை வென்ற அணி என்ற பெயர் மும்பை இந்தியன்ஸ்க்கு உண்டு. அந்த அணி இதுவரை 4 முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது. அதற்கடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்று முறை வென்றுள்ளது. இந்த இரு அணிகளை தவிர்த்து பலமான அணி என்று பார்க்கப்படுவது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இந்த அணி இரண்டு முறை கோப்பையை தன்வசமாக்கியுள்ளது. தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி 13 ஆவது ஐபிஎல் கோப்பையை வெல்லும் உத்வேகத்துடன் இந்த சீசனில் களமிறங்க காத்திருக்கிறது.
2008 இல் முதல் ஐபிஎல் தொடரில் பிரண்டன் மெக்கலத்தின் 158 ரன்கள் அடித்ததன் மூலம் கொல்கத்தா பலம்வாய்ந்த அணியாக கருதப்பட்டது. ஆனால் 2008 தொடரின் இறுதியில் 6ஆவது இடத்தை மட்டுமே பிடித்தது கொல்கத்தா. 2009, 2010 ஐபிஎல் தொடரிலும் கொல்கத்தா அணிக்கு பரிதாப நிலையே தொடர்ந்தது. ஆனால் 2011 தொடரில் மீண்டு எழுந்தது கொல்கத்தா. கவுதம் காம்பீர் தலைமயிலான கொல்கத்தா அணி அந்தாண்டு முதல்முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. பின்பு, 2012 இல் சென்னையை வீழ்த்தி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. பின்பு 2014 இல் மீண்டும் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சாதித்தது கொல்கத்தா. இதற்கடுத்து 2015, 2019 இல் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது கொல்கத்தா.
ஐபிஎல் அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை போலவே கொல்கத்தா அணியிலும் அவ்வளவாக மாற்றங்கள் ஏதும் செய்யவில்லை. இதில் உள்ள வீரர்கள் பல பேர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் அசத்தியவர்கள். அத்துடன் தற்போது சிறந்த ஆட்டத்திறனுடன் விளங்கும் வீரர்கள் அதிகம் இந்த அணியில் இடம்பிடித்து உள்ளனர். குறிப்பாக உள்ளுர் கிரிக்கெட்டில் சாதனைகளை தகர்த்தெறியும் ஷுப்மன் கில் கொல்கத்தா அணியின் இளம் நட்சத்திர பேட்ஸ்மேனாக பார்க்கப்படுகிறார். அதேபோல கொல்கத்தா அணியின் பேட்டிங் இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன், டாம் பேன்டன் கையில் இருக்கிறது. இவர்கள் அதிரடி காட்டினால் கொல்கத்தா சிறந்த அணிகளுக்கு தண்ணிகாட்டும்.
மேலும் கார்லஸ் பிராத்வெய்ட் மற்றும் ஆன்ட்ரூ ரஸல் ஆகியோர் இணைந்து டெத் ஓவரில் அதிரடியாக விளையாடுவார்கள், ரஸல் பல நேரங்களில் ஏற்கெனவே கொல்கத்தா அணிக்கு வெற்றிகளை குவித்து தந்திருக்கிறார். அதுவும் தனி ஒருவராக அதிரடியால் எப்போதும் உச்சம் தொடுவார் ரஸல். மேலும் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முக்கிய வீரராக பொறுப்புடன் செயல்படுவார். பந்துவீச்சில் பார்க்கும் போது பாட் கமின்ஸை ரூ.15.5 கோடிக்கு வாங்கியுள்ளது கொல்கத்தா அணி. உலகின் தலைச் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவர் தங்கள் அணியில் இருப்பதால் பவுலிங்கில் நம்பிக்கையுடன் செயல்படும் கொல்கத்தா.
மேலும் சுழற்பந்து வீச்சில் சுனில் நரேன் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் எதிரணியை மிரட்டுவார்கள். அணிக்கு பின்னடைவு என்று பார்த்தால் சர்வதேச டி20 போட்டிகளில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் மிகவும் குறைவாக இருப்பது கொல்கத்தாவில்தான். இது பல நேரங்களில் கொல்கத்தாவின் வெற்றி வாய்ப்புகளை பறித்திருக்கிறது. ஆனால், சிறு குறைகளை களைந்தால் கொல்கத்தா இந்தாண்டு ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி விஸ்வரூபம் எடுக்கும்.