விளையாட்டு

டெல்லியை 135 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது கொல்கத்தா! பந்துவீச்சில் மிரட்டுமா ரிஷப் படை?

EllusamyKarthik

ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் இரண்டாவது பிளே-ஆஃப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு செய்தது. 

டெல்லி அணிக்காக தவான் மற்றும் பிருத்வி ஷா களம் இறங்கினர். ஐந்தாவது ஓவரில் வெறும் 18 ரன்கள் எடுத்து பிருத்வி ஷா அவுட்டானார். பவர் பிளே ஓவர்கள் முடிவில் அந்த அணி 38 ரன்கள் எடுத்திருந்தது. 

‘விக்கெட்டை மட்டும் விடாமல் இருந்தால் கடைசி ஓவர்களில் பார்த்துக் கொள்ளலாம்’ என்ற தொனியில் தவான் - ஸ்டாய்னிஸ் இணையர் விளையாடினர். இருவரும் 44 பந்துகளை எதிர்கொண்டு 39 ரன்களை மட்டுமே எடுத்திருந்தனர். ஸ்டாய்னிஸ் 12-வது ஓவரில் 18 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

தொடர்ந்து தவான் மற்றும் டெல்லி அணியின் கேப்டன் பண்ட் அவுட்டாகி வெளியேறினார். 16 ஓவர்கள் முடிவில் 92 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது டெல்லி. ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் ஹெட்மயர் களத்தில் இருந்தனர். 19-வது ஓவரில் ஹெட்மயர், 17 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். ஷ்ரேயஸ் ஐயர் 30 ரன்கள் எடுத்து இறுதி வரை விக்கெட்டை இழக்காமல் இருந்தார்.  

கொல்கத்தா அணிக்காக வருண் (2), ஷிவம் மாவி மற்றும் பெர்க்யூசன் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்களை எடுத்தது டெல்லி. 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டி வருகிறது கொல்கத்தா. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளும். 

நடப்பு சீசனின் பிற்பாதியில் கொல்கத்தா அணி சேஸ் செய்த ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மறுபக்கம் டெல்லி அணி இந்த சீசனில் முதலாவதாக ஐந்து முறை பேட் செய்து அதில் நான்கு முறை தோல்வியை தழுவி உள்ளது. புள்ளிவிவரங்கள் இப்படி இருந்தாலும் ரபாடா, நோர்க்யா, ஆவேஷ் கான், அஷ்வின், அக்சர் பட்டேல், ஸ்டாய்னிஸ் என எதிரணியை அச்சுறுத்தும் ஆறு பவுலர்கள் டெல்லி அணியில் இடம் பெற்றுள்ளனர். இரண்டாவது பாதியில் அவர்களது செயல்பாட்டை பொறுத்தே வெற்றி வாய்ப்பு அமையும்.