விளையாட்டு

கம்மின்ஸின் பவுன்சர் பந்து தாக்கி, இலங்கை வீரர் மருத்துவமனையில் அனுமதி!

webteam

ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் வீசிய பவுன்சர் பந்து தாக்கியதில், இலங்கை கிரிக்கெட் வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பெராவில் நேற்று தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி, 5 விக்கெட்டுக்கு 534 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.

இதையடுத்து இலங்கை அணி, இன்று முதல் இன்னிங்சை தொடங்கியது. திமுத் கருணாரத்னேவும் திரிமன்னேவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிறனர். இருவரும் நிதானமாக ஆடினர். 31 வது ஓவரை பேட் கம்மின்ஸ் வீசினார். அவரது பவுன்சர் பந்தை அடிக்காமல் விட்டுவிட, குனிய முயற்சித்தார் கருணாரத்னே. ஆனாலும் வேகமாக வந்த பந்து, அவரின் தோள் பட்டையில் பட்டு, தலையிலும் கழுத்துப் பகுதியிலும் பலமாக மோதியது. 

140 கி.மீ. வேகத்தில் வந்த பந்து என்பதால், நிலைகுலைந்த கருணாரத்னே சரிந்து விழுந்து மயங்கினார். உடனடியாக, பீல்டிங் கில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலிய வீரர்கள், இலங்கை, ஆஸ்திரேலிய அணி மருத்துவர்கள் உடனடியாக மைதானத்துக்கு வந்து, முதலுதவி செய்தனர். கழுத்துப் பகுதியில் தொடர்ந்து வலி இருப்பதாகவும், தலையில் வலி இருப்பதாகவும் அவர் தெரிவித்ததை அடுத்து, ஸ்ட்ரெச்சரில் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து வருவதாக ஆஸ்திரே லிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.