கிரிக்கெட் உலகில் மறக்க முடியாத நாயகன் கபில்தேவின் 62வது பிறந்தநாள் இன்று
இந்திய கிரிக்கெட் அணி 1983-ஆம் ஆண்டில் கபில்தேவ் தலைமையில் வரலாற்று சிறப்புமிக்க உலகக் கோப்பையை வென்றது. இந்திய கிரிக்கெட் அணிக்கு உலகக்கோப்பையை நிகழ்த்திக்காட்டியவர் கபில்தேவ். சிறந்த ஆல்ரவுண்டரான கபில்தேவ், கோப்பையை கையில் ஏந்திய தருணத்தை எந்த கிரிக்கெட் ரசிகராலும் மறக்க முடியாது. காலங்கள் ஓடினாலும் கிரிக்கெட் உலகில் மறக்க முடியாத நாயகன் கபில்தேவின் 62வது பிறந்தநாள் இன்று. அவரது பிறந்தாளுக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். வாழ்த்தை பதிவு செய்துள்ள பிசிசிஐ, சிறந்த ஆல்ரவுண்டர், 1983 வேர்ல்டு கப் கேப்டனுக்கு பிறந்தநாள் என பதிவிட்டுள்ளது. அதோடு கபில்தேவின் ரன்கள், விக்கெட்டுகளையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சச்சின் டெண்டுல்கர், கபில்தேவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் பெற வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளர். மேலும் பல கிரிக்கெட் வீரர்களும், பல ரசிகர்களும் தங்கள் வாழ்த்து மழையில் கபில் தேவை நனைய வைத்துள்ளனர்.
கபில்தேவ் தனது சர்வதேச போட்டிகளை 1978ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக தொடங்கினார். மொத்தம் 131 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய கபில்தேவ் 5248 ரன்களை எடுத்துள்ளார். 438 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஒருநாள் போட்டிகளை பொருத்தவரை, 225 போட்டிகளில் பங்கேற்று 253 விக்கெட்டுகளை பெற்றுள்ள கபில்தேவ், 3783 ரன்கள் எடுத்துள்ளார். 1983ம் ஆண்டு உலகக் கோப்பையின் போது ஜிம்பாப்பேவுக்கு எதிராக 175 ரன்கள் எடுத்து அதிர வைத்தவர் கபில்தேவ். அதுதான் ஒருநாள் போட்டியில் அவர் அடித்த ஒரே செஞ்சுரியாகும். இத்தகைய கபில் தேவுக்கு பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை கொடுத்து அரசு கவுரவம் செய்துள்ளது.