இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ராவை ஆரம்பத்தில் பார்த்தபோது மிகவும் யோசித்தேன் என்று கபில்தேவ் கூறினார்.
அவர் மேலும் கூறும்போது, ‘பும்ரா சிறந்த வீரர். பந்துவீச்சாளர் என்றால் இப்படிதான் பந்துவீசுவார் என்ற ரசிகர்களின் நினைப்பை மாற்றியமைத்தவர் அவர். அவர் பந்துவீச்சு வித்தியாசமானது. ஆரம்பத்தில் அவரை நான் பார்த்தபோது, ’இவர் ஸ்டைலே வேறு மாதிரி இருக்கிறதே...இவரெல்லாம் எப்படி பந்து வீசப் போகிறார் என்று நினைத்தேன். ஆனால், என் எண்ணத்தை மாற்றிவிட்டார் பும்ரா. கிரிக்கெட்டில் ஒவ்வொரு கேப்டனுக்கும் ஒரு அணுகுமுறை உள்ளது. விராத் கோலிக்கும் அப்படியிருக்கிறது. அதை நாம் மதிக்க வேண்டும்.
திறமையான வீரராக இருந்து கேட்ச்களை பிடிக்காமல் இருந்தால் அதனால் என்ன பயன்? அதனால் வீரர்களுக்கு சரியான உடல் தகுதி கண்டிப்பாக தேவை. யோ-யோ டெஸ்ட் ஒன்றும் கடினமான ஒன்றாகத் தெரியவில்லை. அதில் வீரர்கள் தேர்ச்சி பெறமுடியும்.
ஹர்திக் பாண்ட்யாவை, அணியில் மாற்றி மாற்றி இறக்குவது பற்றி கேட்கிறார்கள். நாம் வெளியில் இருக்கிறோம். அவரை எங்கு இறக்க வேண்டும் என்பது அணி நிர்வாகத்துக்கு சரியாக தெரியும்’ என்றார்.