ஆஸ்திரேலியாவில் கால்பந்தாட்ட மைதானத்தில் கங்காரு ஒன்று ரகளை செய்த வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.
கன்பெர்ரா மற்றும் பெல்கானென் யுனடெட் பெண்கள் அணிகளுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த அந்தப் போட்டியில் மைதனாத்திற்குள் திடீரென கங்காரு ஒன்று உள்ளே நுழைந்தது. மைதானத்தின் ஒரு மூலையில் இருந்து உள்ளே நுழைந்த அந்தக் கங்காரு உள்ளே தாவித்தாவி குதித்து ஓடியது. உள்ளே இருந்த பெண் கால்பந்தாட்ட வீரர்கள் கங்காரு திடீரென நுழைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து ஓடினர்.
பின்னர் கங்காருவை விரட்ட மைதான ஊழியர்கள் நீண்ட நேரமாக முயற்சித்தனர். ஆனால், அவ்வளவு எளிதில் கங்காரு வெளியே போகவில்லை. நீண்ட நேரம் போராடி கங்காருவை மைதானத்திற்கு வெளியே விரட்டினர். கங்காருவின் சேட்டையால் சிறிது நேரம் போட்டி தடைபட்டு பின்னர் மீண்டும் விளையாடினர். இதில், பெல்கானென் யுனடெட் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.