விளையாட்டு

நியூசிலாந்து வீரர்களில் அதிக ரன்கள் - வில்லியம்சன் சாதனை

நியூசிலாந்து வீரர்களில் அதிக ரன்கள் - வில்லியம்சன் சாதனை

rajakannan

ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை கேன் வில்லியம்சன் படைத்துள்ளார்.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி முதல் 5 போட்டிகளில் தோல்வியையே சந்திக்கவில்லை. ஆனால், கடைசி 3 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்தது. இருப்பினும், ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி அரையிறுதி வரை வந்துள்ளது. 

இந்தியாவுடன் இன்று நடைபெற்று வரும் போட்டியில் நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. 46.1 ஓவரில் மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கேப்டன் வில்லியம்சன்(67) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டெய்லர் (67) அரைசதம் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியில் பேட்டிங் பலம் அவ்வளவாக இல்லை. கேப்டன் வில்லியம்சன் மட்டுமே தனி நபராக இருந்து பலப் போட்டிகளில் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 2 சதம், 2 அரை சதம் உட்பட 548 ரன்கள் குவித்துள்ளார். முக்கிய வீரர்களான குப்தில் 167, முன்ரோ 125, லாதம் 101 ரன்கள் மட்டுமே எடுத்தனர். நீஷம் 213 எடுத்தார். டெய்லர் 328 ரன்கள் எடுத்துள்ளார்.

நியூசிலாந்து அணியில் ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை வில்லியம்சன் படைத்துள்ளார். 2015 உலகக் கோப்பையில் குப்தில் 547 ரன்கள் அடித்ததே அதிகமாக இருந்தது. தற்போது வில்லியம்சன் ஒரு ரன் அதிகமாக அடித்து 548 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

அதேபோல், இந்தத் தொடரிலும் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் நான்காவதாக உள்ளார். ரோகித் சர்மா 647, டேவிட் வார்னர் 638, ஷகிப் அல் ஹாசன் 606 ரன்களுடம் முதல் மூன்று இடத்தில் உள்ளனர்.