ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நியூஸிலாந்துடனான முதல் ஒருநாள் ஆட்டம் இன்று சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால் போட்டிக்கு முன்பாக தொண்டை வறட்சி மற்றும் சளி பிரச்னை காரணமாக விலகிய கேன் ரிச்சர்ட்ஸன், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆஸ்திரேலிய அரசின் விதிகளின்படி கேன் ரிச்சர்ட்சனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்குமோ என சந்தேகிக்கப்பட்டது.
இதனையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட அறையில் அனுமதிக்கப்பட்ட கேன் ரிச்சர்ட்ஸனுக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதன் முடிவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்று மருத்துவமனை இன்று உறுதி செய்தது. உடனடியாக இந்தத் தகவலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் "கேன் ரிச்சர்ட்சனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை" என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கேன் ரிச்சர்ட்சன் ஆஸ்திரேலிய அணி வீரர்களுடன் இணைந்து நியூசிலாந்து உடனான போட்டியை பார்த்து வருகிறார். அதன் புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.