புரோ கபடி லீக் தொடரின் 11வது சீசனானது அக்டோபர் 18-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவந்த நிலையில், இறுதிப்போட்டியானது டிசம்பர் 29-ம் தேதியான இன்று நடைபெற்றது.
12 அணிகள் பலப்பரீட்சை நடத்திய நிலையில், தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட ஹரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகள், அரையிறுதிப்போட்டியில் உபி யோதாஸ் மற்றும் டபாங் டெல்லி அண்களை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.
பரபரப்பான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
3 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற பாட்னா பைரேட்ஸ் அணி 5வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், கடந்த புரோ கபடி லீக் சீசனின் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்திருந்த ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி இந்தமுறை சாம்பியன் பட்டத்தை வெல்லவேண்டும் என்ற முனைப்பில் இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
சமபலம் கொண்ட இரண்டு அணிகளுக்கு இடையேயான போட்டி என்பதால், அதிகப்படியான எதிர்ப்பார்ப்புடன் போட்டி தொடங்கியது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி பாட்னா பைரேட்ஸை திணறடித்தது. ரைடு, டாக்குள் இரண்டிலும் அசத்திய சிவம் பட்டரே 9 புள்ளிகளை அள்ளி பிளேயர் ஆஃப் தி மேட்ச்சாக விளங்கினார். சக வீரரான ஷாட்லூயி சியானே 7 புள்ளிகளை பெற்று பக்கபலமாக விளங்கினார்.
அனல்பறந்த போட்டியின் முடிவில் 32-23 என்ற புள்ளிகள் கணக்கில் 3 முறை சாம்பியனான பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி.