ஒரே ஓவரில் 37 ரன்கள் குவித்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜேபி டுமினி சாதனை படைத்தார்.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஜேபி டுமினி. இவர் உள்ளூர் முதல் தர போட்டியில், கேக் கோப்ராஸ் அணிக்காக ஆடி வருகிறார். இதில், நைட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டுமினி நேற்று அதிரடி காட்டினார். ஆட்டத்தின் 36-வது ஓவரில், சுழற்பந்துவீச்சாளர் எடி லீயின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். முதல் நான்கு பந்துகளை சிக்சருக்கு விளாசிய அவர், ஐந்தாவது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தார். ஆறாவது பந்தில் பவுண்டரி விளாசினார். இந்த பந்து நோ-பால் ஆனது. இதையடுத்து மீண்டும் 6 வது பந்து வீசப்பட்ட நிலையில், அதையும் சிக்சருக்கு விளாசினார். இதன் மூலம் ஒரே ஓவரில் 37 ரன்கள் அடித்து உள்ளூர் போட்டி வரலாற்றில் டுமினி சாதனை படைத்தார். டுமினி மொத்தமாக 37 பந்துகளில் 70 ரன்கள் அடித்து கோப்ராஸ் அணியின் வெற்றிக்கு உதவினார்.
இதுபற்றி டுமினி கூறும்போது, ’அணியின் வெற்றிக்கு 4 ஓவர்களில் 35 ரன்கள் தேவை என்பதை ஸ்கோர்போர்டில் பார்த்தேன். அப்போது, எடி வீசிய முதல் இரண்டு பந்துகளை சிக்சருக்கு விளாசினேன். எளிதாக இருந்ததால் தொடர்ந்து அவர் பந்தை அடித்து ஆடினேன். அதனால் இந்த ரன்கள் கிடைத்தது. இந்த மாதிரியான வாய்ப்பு எப்போதும் கிடைத்துவிடாது’ என்றார்.