விளையாட்டு

ஜெர்சியை ஏலம் விட்டு நிதி திரட்டும் கிரிக்கெட் வீரர் !

jagadeesh

கொரோனா சிகிச்சைக்கு நிதி திரட்டும் விதமாக, உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அணிந்து விளையாடிய ஜெர்சியை ஏலம் விடுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லர் அறிவித்துள்ளார்.

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக இங்கிலாந்து அணி, ஒரு நாள் உலகக்கோப்பையை கடந்தாண்டு கைப்பற்றியது. இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் மருத்துவ உபகரணங்களை வாங்க நிதி திரட்டும் நடவடிக்கையில் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் இறங்கியுள்ளார்.

அதன்படி, தான் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அணிந்து விளையாடிய ஜெர்சியை ஏலம் விடுவதாகவும், அதன் மூலம் கிடைக்கப்பெறும் தொகை முழுவதும் மருத்துவ உபகரணங்கள் வாங்க பயன்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவை, மறுபதிவு செய்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், சுரேஷ் ரெய்னா ஆகியோரை பட்லர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சச்சின் டெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா, விராட் கோலி, ரோகித் சர்மா, ரஹானே உள்ளிட்ட பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பிரதமர் மற்றும் மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற நிதியை கொடுத்து வருகின்றனர்.