விளையாட்டு

டிஎன்பிஎல் 2017: திருச்சி அணியுடன் இணைந்த ஜான்டி ரோட்ஸ்

webteam

நடப்பு டிஎன்பில் தொடரில் திருச்சி வாரியர்ஸ் அணியின் ஆலோசகராக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்த தகவலை ட்விட்டரில் தெரிவித்துள்ள திருச்சி வாரியர்ஸ் அணி நிர்வாகம், அணியின் விளம்பர தூதுவராகவும் ஜான்டி ரோட்ஸ் செயல்படுவார் என்று அறிவித்துள்ளது. ஜான்டி ரோட்ஸ் நியமனம் குறித்து பேசிய திருச்சி அணியின் தலைமை பயிற்சியாளர் டினு யோகனன், ரோட்ஸ் போன்ற சிறந்த வீரரின் அனுபவங்கள், இளம் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும். அவரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வீரர்கள் பயிற்சியின் போது அவரது இருப்பு மிகப்பெரிய ஊக்கம் கொடுக்கும் என்று அவர் தெரிவித்தார். திருச்சி அணியுடன் ஆகஸ்ட் 7ல் ஜான்டி ரோட்ஸ் இணைய இருப்பதாகவும் யோகனன் தெரிவித்தார். ஐபிஎல் போன்று கடந்தாண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு பிரிமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் தொடரின் இரண்டாவது சீசன் ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் பங்கேற்கும் கோவை அணிக்கு தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் லான்ஸ் குளுஸ்னர் பயிற்சியாளராகவும், திருவள்ளூர் அணிக்கு இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் ஆலோசகராகவும் பணியாற்றி வருகின்றனர்.