விளையாட்டு

’கொரோனா சோதனையில் நெகடிவ்’ - சர்ச்சைக்கு பின் மீண்டும் அணியில் இணைந்தார் ஆர்ச்சர் !

’கொரோனா சோதனையில் நெகடிவ்’ - சர்ச்சைக்கு பின் மீண்டும் அணியில் இணைந்தார் ஆர்ச்சர் !

jagadeesh

கொரோனா விதிகளை மீறியதாக அணியிலிருந்து நீக்கப்பட்ட இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் கடைசி டெஸ்ட் போட்டிக்காக மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார்.

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே உயிர் பாதுகாப்பு சூழலுக்கு (Biosecurity bubble) நடுவே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணி வீரர்களும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாத வகையில் கடும் கட்டுப்பாடுகளுடன் விதிகளை பின்பற்றி ஆடி வருகின்றனர். முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

முதலாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்பின் 2வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டு ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த போட்டியில், இங்கிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. இவ்விரு அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் வருகிற 24 ஆம் தேதி தொடங்குகிறது.

முன்னதாக இரண்டாவது போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக இங்கிலாந்து அணியிலிருந்து ஜோப்ரா ஆர்ச்சர் கொரோனா விதிகளை மீறியதற்காக நீக்கப்பட்டார். இதனையடுத்து ஜோப்ரா ஆர்ச்சர் 5 நாள்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டு முறை கொரோனா வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் விதிகளை மீறியதற்காக ஜோப்ரா ஆர்ச்சருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

இதனையடுத்து ஓல்ட் டிராப்போர்டில் உள்ள ஹோட்டலில் 5 நாள்கள் தனிமைப்படுத்துதலில் ஜோப்ரா ஆர்ச்சர் வைக்கப்பட்டார். சில கட்டுப்பாடுகளுடன் உடற்பயிற்சி செய்வதற்கு அனுமதிக்கப்பட்டார். இதன்பின்னர், தொடர்ச்சியாக அவருக்கு 2 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், அவருக்கு கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை என முடிவு வந்துள்ளது. இதனை தொடர்ந்து தொடரை முடிவு செய்யும் இறுதி போட்டியில் அவர் சேர்க்கப்பட்டு ஜோப்ரா ஆர்ச்சர் உள்ளார்.