விளையாட்டு

இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்பை துறந்தார் ஜோ ரூட்! என்ன காரணம்?

ச. முத்துகிருஷ்ணன்

தொடர் தோல்விகள் எதிரொலியாக இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜோ ரூட் விலகியுள்ளார்.

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருந்து வந்தவர் 31 வயதேயான ஜோ ரூட். 2017 ஆம் ஆண்டில் இருந்து கேப்டன் பதவியை ஏற்ற ஜோ ரூட், இன்று திடீரென அப்பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரை 0-4 என்ற கணக்கில் இங்கிலாந்து மிக மோசமாக தோற்றது இதற்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும் தரவரிசையில் 8ஆம் இடத்தில் உள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 0-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது ஜோ ரூட் கேப்டன்ஷிப் மீது கடும் விமர்சனங்களை கிளப்பியது. இதையடுத்து கேப்டன் பதவியில் இருந்து விலக ஜோ ரூட் முடிவு எடுத்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

ஜோ ரூட் 2017-ஆம் ஆண்டு அலெய்ஸ்டர் குக் - இடம் இருந்து இங்கிலாந்து கேப்டன் பொறுப்பை ஏற்றார். வரலாற்றிலேயே அதிக டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியை வழிநடத்திய கேப்டன் என்ற பெருமை ஜோ ரூட்டையே சேரும். இதுவரை 64 போட்டிகளில் இங்கிலாந்து அணியை வழிநடத்தியுள்ளார் ஜோ ரூட். இவற்றில் 27 போட்டிகளில் வெற்றி பெற்றார் மற்றும் 26 போட்டிகளில் தோல்வியை சந்தித்தார். 11 போட்டிகள் டிரா ஆனது.

கேப்டனாக அவரின் வெற்றி சதவீதம் 42.18 ஆகும். துவக்க ஆட்டங்களில் வெற்றிகளை அதிகம் குவித்த ஜோ ரூட்டிற்கு கடைசி இரு வருடங்கள் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. ரூட் தலைமையில் இங்கிலாந்து விளையாடிய கடைசி 18 டெஸ்ட் போட்டிகளில் 2 வெற்றியை மட்டும் சந்தித்து 11 தோல்வியை பெற்றது குறிப்பிடத்தக்கது.