விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பையில் இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி நிகழ்த்திய புதிய சாதனை - என்ன தெரியுமா?

webteam

நியூசிலாந்தில் மகளிர் உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி மேற்கு இந்திய தீவுகள் அணியை இன்று எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி, மேற்கிந்திய தீவுகளின் அனிஷா முகம்மதுவை வீழ்த்தியதன் மூலம், உலகக்கோப்பை கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை படைத்தார். 39 வயதான அவர், 5 உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்றுள்ளார். 2005, 2009, 2013, 2017, 2022 ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடர்களில் மொத்தம் 40 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதற்கு முன்பு முன்னாள் ஆஸ்திரேலிய வீராங்கனை லின் புல்ஸ்டன் 39 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருந்து வந்தார். 34 ஆண்டுகளாக இந்த சாதனை முறியடிக்கப்படவில்லை. இன்று இந்த சாதனையை தகர்த்து எறிந்தார் இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி. உலகக்கோப்பை போட்டிகளில் மொத்தமாக 40 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் இந்த நெடுநாள் சாதனையை அவர் முறியடித்தார்.