விளையாட்டு

“சற்று அசந்திருந்தால் பாம்பு டான்ஸ் ஆடியிருப்பார்கள்” - செக் வைத்த பும்ரா 

“சற்று அசந்திருந்தால் பாம்பு டான்ஸ் ஆடியிருப்பார்கள்” - செக் வைத்த பும்ரா 

rajakannan

பும்ரா, புவனேஸ்வர், சமி என தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருப்பதால் பங்களாதேஷ் வீரர்களால் தாக்குப்பிடிக்க முடியாது எனப் பலரும் நினைத்தனர். ஆனால், பங்களாதேஷ் வீரர்களின் நேர்த்தியான ஆட்டம் இந்திய வீரர்களை திணறடித்துவிட்டது.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வலிமையான அணியாக உருவெடுத்துள்ளது. உலகின் சிறந்த ஆல் ரவுண்டராக ஷகிப் அல் ஹசன் மிரட்டியுள்ளார். 500 ரன்களுக்கு மேல் அடித்து, பேட்டிங்கில் அவர் மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்துள்ளார். பந்துவீச்சிலும் அவர் பத்துக்கும் மேற்பட்ட விக்கெட் எடுத்துள்ளார். பங்களாதேஷ் அணியின் மிகப்பெரிய தூணாக அவர் உள்ளார். எல்லாப் போட்டிகளிலும் அவர் சிறப்பாக விளையாடியுள்ளார்.

புள்ளிப் பட்டியலில் முன்னிலையில் உள்ள அணிகளுடன் கூட பங்களாதேஷ் மிரட்டலாக விளையாடியது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 382 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய அந்த அணி 333 ரன்கள் எடுத்து அசத்தியது. நியூசிலாந்து அணி கூட பங்களாதேஷ் அணியிடம் போராடிதான் வெற்றி பெற்றது. தென்னாப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் 330 ரன்கள் குவித்து, அந்த அணியை 309 ரன்னில் கட்டுப்படுத்தி பங்களாதேஷ் வெற்றிபெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிதான் மிகவும் முக்கியமானது. 322 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பங்களாதேஷ் 41.3 ஓவரிலே வெற்றி வாகை சூடியது.  

இத்தகைய நிலையில்தான் இந்தியா, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி எளிதில் வெற்றிபெற்றுவிடும் என்றே கருதப்பட்டது. ஆனால், போட்டி அவ்வாறு முடியவில்லை. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 314 ரன்கள் எடுத்தது. ரோகித் காட்டிய அதிரடியால் இந்திய அணி 350 ரன்களுக்கு மேல் எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதியில் மிடில ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்ப 30-40 ரன்கள் குறைவாகவே எடுக்க முடிந்தது.

பும்ரா, புவனேஸ்வர், சமி என தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருப்பதால் பங்களாதேஷ் வீரர்களால் தாக்குப்பிடிக்க முடியாது எனப் பலரும் நினைத்தனர். ஆனால், பங்களாதேஷ் வீரர்களின் நேர்த்தியான ஆட்டம் இந்திய வீரர்களை திணறடித்துவிட்டது. ஷகிப் அல் ஹாசன் தவிர மற்றவர்கள் குறைவான ரன்களில் ஆட்டமிழந்திருந்த போதும், ஒவ்வொரு பங்களாதேஷ் வீரரும் 20 ரன்களுக்கு குறைவில்லாமல் அடித்தனர். இக்பால் 22, சவுமியா சர்கார் 33, முஸ்பிகூர் ரஹிம் 24, லிடன் தாஸ் 22 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், தனி ஆளாக போராடிய ஷகிப் அல் ஹசன் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

ஷகிப் ஆட்டமிழக்கும் போது பங்களாதேஷ் அணி 33.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்திருந்தது. இன்னும் 4 விக்கெட் மட்டுமே அந்த அணியின் கைகளில் இருந்தது. ஆனால், 16  ஓவரில் அந்த அணி 136 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. அதனால், பங்களாதேஷ் அணி 250 ரன்கள் கூட எட்டாது என்றே கருதப்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக முகமது சைஃபுதீன், சப்பீர் ரஹ்மான் ஜோடி அபாரமாக விளையாடியது. வேகப்பந்து வீச்சாளரான சைஃபுதீன் பேட்ஸ்மேனைப் போல் நேர்த்தியாக விளையாடினார். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி இலக்கு குறைந்து கொண்டே வந்தது. 

ஷகிப் ஆட்டமிழந்ததால் போட்டி முடிந்துவிட்டதாக நினைத்து இந்திய வீரர்கள் விளையாடியது போல் தோன்றியது. ஆனால், முகமது சைஃபுதீன், சப்பீர் ரஹ்மான் ஜோடி இந்திய வீரர்களுக்கு சற்று பயம் காட்டிவிட்டது. ஷமி ஓவரில் பவுண்டரிகளாக பறந்தது. 43 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தது இந்த ஜோடி. 10 ஓவர்களில் 90 ரன்கள் என்ற நிலைக்கு வந்து பின்னர், 5 ஓவரில் 51 ரன்கள் என்ற நிலைக்கு வந்துவிட்டது. சப்பீர் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த போதும், சைஃபுதீன் தொடர்ந்து அதிரடி காட்டினார். அதனால், 250 ரன்களை பங்களாதேஷ் எளிதில் கடந்தது. 

47 ஓவர்கள் முடிவில் பங்களாதேஷ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் எடுத்திருந்தது. மீதமுள்ள 18 பந்துகளில் 36 மட்டுமே தேவை. சைஃபுதீன் 35 பந்துகளில் 45 ரன்கள் அடித்து களத்தில் இருக்கிறார். இந்திய ரசிகர்கள் கொஞ்சம் பதட்டம் அடைந்து விட்டனர். ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது ஏமாற்றமாக அது இருந்தது. அதனால், பங்களாதேஷ் போட்டியிலும் தோல்வி அடைந்தால் மிகவும் ஏமாற்றமாக அமைந்துவிடும். இந்தியா - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே ஒரு காரசார வரலாறும் உண்டு. 

48வது ஓவரை பும்ரா வீசினார். முதல் பந்தில் சிங்கில் அடித்த சைஃபுதீன் மூன்றாவது பந்தில் பவுண்டரி அடித்து அரைசதம் நிறைவு செய்தார். அதனால், ஆட்டத்தில் இன்னும் பரபரப்பு எகிறியது. ஆனால், சைஃபுதீனை எதிர்முனையில் நிற்க வைத்து பும்ரா ரூபெல் ஹொசைனை கிளீன் போல்ட் ஆக்கினார். அதே கையுடன் அடுத்த பந்திலே முஸ்தபீர் ரஹ்மானையும் கிளீன் போல்ட் ஆக்கி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார் பும்ரா. இரண்டுமே மிகவும் நேர்த்தியான யெர்க்கர். உலகின் நெம்பர்.1 பந்துவீச்சாளர் என்பதை பும்ரா மீண்டும் நிரூபித்துவிட்டார்.

வழக்கமாக பங்களாதேஷ் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் உணர்வுப்பூர்வமானவர்கள். மைதானத்தில் புலி வேடமிட்டு வந்து தங்கது வீரர்களை ரசிகர்கள் உற்சாகப்படுத்துவார்கள். அதேபோல், பாம்பு நடனம் ஆடுவது அவர்களின் முக்கியமான பழக்கம். ஏற்கனவே இந்திய அணியை முக்கியமான சில போட்டிகளில் பங்களாதேஷ் தோற்கடித்து அதிர்ச்சி அளித்திருந்தது.

அப்பொழுதெல்லாம் இந்திய வீரர்களை கிண்டல் செய்யும் வகையில் பாம்பு நடனம் ஆடுவார்கள். நிதாடாஸ் முத்தரப்பு தொடரில் இலங்கை அணியை தோல்வி அடையச் செய்தபின் பங்களாதேஷ் வீரர்களே பாம்பு நடனம் ஆடி காட்டினர் . நேற்றையப் போட்டியில் இந்திய வீரர்கள் கொஞ்சம் அசந்திருந்தால் பங்களாதேஷ் வீரர்கள் உற்சாக பாம்பு டான்ஸ் ஆடையிருப்பார்கள். பும்ரா தன்னுடைய யெர்க்கர் தாக்குதலில் அதற்கு செக் வைத்துவிட்டார்.