விளையாட்டு

குவிகிறது பாராட்டு: டெஸ்ட்டில் ஹாட்ரிக் வீழ்த்திய 3 வது இந்திய வீரர் பும்ரா!

குவிகிறது பாராட்டு: டெஸ்ட்டில் ஹாட்ரிக் வீழ்த்திய 3 வது இந்திய வீரர் பும்ரா!

webteam

டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 3 வது இந்தியர் என்ற பெருமையை இந்திய கிரிக்கெட் அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பெற்றுள்ளார்.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று தொடர்ந்தது. சிறப்பாக ஆடிய விஹாரி, தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அவர் 111 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு துணையாக நின்ற இஷாந்த் சர்மா அரைசதம் விளாசினார். அவர் 57 ரன்கள் எடுத்தார். பின்னர் இந்திய அணி 416 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. 

பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்துள்ளது.  இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். அவர் டேரன் பிராவோ, புரூக்ஸ், சேஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து சாய்த்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 3 வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதற்கு முன் ஹர்பஜன் சிங், இர்பான் பதான் ஆகியோர் டெஸ்ட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீத்தியுள்ளனர்.

ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ள பும்ராவுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.