விளையாட்டு

சாகறதுக்குள்ள பேரனை பார்க்கணும்: தவிக்கிறார் பும்ராவின் தாத்தா!

webteam

‘நான் இறப்பதற்குள் என் பேரனை நேரில் பார்க்க வேண்டும்’ என்று உருக்கமாகக் கூறியிருக்கிறார், இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் பும்ராவின் தாத்தா!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர், பும்ரா. இந்திய கிரிக்கெட் அணியின் யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட். சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது, நோ-பால் போட்டு ஏமாற்றியதன் மூலம் எல்லை தாண்டிய பும்ராவாக பிரபலமாகி இருக்கிறார் இப்போது. இவரது தாத்தா சண்டோக் சிங், உத்தரகண்டில் வசிக்கிறார். 

தனது பேரனை நேரில் பார்க்க வேண்டும் என்று தவிக்கிற சண்டோக் சிங், ‘நான் அகமதாபாத்ல பிசினஸ் பண்ணிட்டிருந்தேன். நாலஞ்சு பேக்டரி இருந்தது. அதை கவனிச்சுட்டிருந்தவர் பும்ராவின் அப்பா ஜஸ்பிர் சிங். 2001-ல் அவர் எதிர்பாராம இறந்ததுல இருந்து என் பிசினஸ் நஷ்டமாச்சு. எல்லாம் போச்சு. பிறகு அங்கயிருந்து உத்தரகண்ட் வந்துட்டேன். நாலஞ்சு வேன்களை வாங்கி பிசினஸ் ஆரம்பிச்சேன். அதுவும் நஷ்டம். இப்போ ஆட்டோ ஓட்டிட்டு இருக்கேன். சின்ன வயசுலயே பிரமாதமா கிரிக்கெட் ஆடுவான் என் பேரன் பும்ரா. ஐபிஎல் போட்டிகள்ல அவனை டிவியில பார்க்கும்போது பெருமையா இருக்கும். இப்போ இந்திய அணியில வேற இடம்பிடிச்சிருக்கான். அவன் நல்லா வரணும்னு நான் பிரார்த்தனை பண்ணிக்கிட்டே இருக்கேன். இத்தனை வருஷத்துக்குப் பிறகு எங்க குடும்பம் ஒண்ணு சேரணும். நான் சாகறதுக்குள்ள பும்ராவை நேர்ல பார்க்கணும். இதுதான் இப்போதைக்கு என் ஆசை’ என்கிறார் 84-வயது சண்டோக் சிங்.
தாத்தாவின் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறது குடும்பம்.