பங்களாதேஷ் அணிக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 12வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - பங்களாதேஷ் அணிகள் நேற்று மோதின. கார்டிப் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
(பேர்ஸ்டோ, ஜேசன் ராய்)
ராய் அதிரடியாக விளையாட, அவருக்கு ஒத்துழைப்பு அளித்து பேர்ஸ்டோவ் நிதானமாக ஆடினார். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணியின் ரன் கிடுகிடுவென அதிகரித்தது. இவர்களை பங்களாதேஷ் வீரர்களால் பிரிக்க முடியவில்லை. ராய் 38 பந்துகளில் அரைசதம் அடித்தார். பேர்ஸ்டோவ் 50 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ராய் தொடர்ந்து அதிரடி காட்டினார். கொஞ்ச நேரம் அவருக்கு ஒத்துழைப்பு அளித்த ரூட் 21 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர், ராயுடன் பட்லர் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடினர். 92 பந்துகளில் சதம் அடித்த ராய், பின்னர் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவர் 120 பந்துகளிலேயே 150 ரன்கள் எட்டினார்.
ராய் 153(121) ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். 5 சிக்சர், 14 பவுண்டரிகளை அவர் அடித்தார். ராய்-யை தொடர்ந்து பட்லர் அதிரடியாக விளையாடி 64 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவர் 4 சிக்சர், 2 பவுண்டரிகள் அடித்தார். மோர்கன் 35(33) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 386 ரன்கள் குவித்தது. பங்களாதேஷ் அணியில் மெஹிடி ஹசன், முகமது சைபுதின் தலா இரண்டு விக்கெட் எடுத்தனர்.
அடுத்து 387 ரன் என்ற இமாலய இலக்கை விரட்டத் தொடங்கிய பங்களாதேஷ் அணி, தொடக்கத்திலேயே சவும்யா சர்க்கார் (2) மற்றும் தமிம் இக்பாலின் (19) விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும் ஷகிப் அல் ஹசனும் முஷ்பிஹுர் ரஹிமும் இணைந்து அணியின் சரிவை தடுத்து நிறுத்தி சீரான வேகத்தில் ரன்களை குவித்தனர்.
ஷகிப் அல் ஹசன் 121 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். எனினும் அடுத்தடுத்து வந்த வீரர்கள் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுக்க, பங்களாதேஷ் அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 280 ரன்களை மட்டும் எடுத்து தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணி 106 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளையும் மார்க்வுட் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஜேசன் ராய் ஆட்டநாயகன் விருது பெற்றார்.