ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதன் மூன்று போட்டிகளில் வென்று இங்கிலாந்து அணி தொடரைக் கைப்பற்றி விட்டது. மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி, பேர்ஸ்டோ (139 ரன்), அலெக்ஸ் ஹாலெஸ் (147), ஜேசன் ராய் (82), மோர்கன் (67) ஆகியோரின் அதிரடியால் 481 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்தது.
(ஷான் மார்ஷ்)
இந்நிலையில் நான்காவது ஒரு நாள் போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அந்த அணி யின் தொடக்க வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அந்த அணி, 8 விக்கெட் இழப் புக்கு 310 ரன்கள் எடுத்தது. கடந்த சில போட்டிகளில் சரியாக விளையாடாமல் இருந்த ஆரோன் பின்ச் அபாரமாக ஆடி, சதமடித்தார். ஷான் மார்ஷூம் சதமடித்து மிரட்டினார். இங்கிலாந்து தரப்பில் டேவிட் வில்லி 4 விக்கெட்டுகளையும் மார்க் வுட், ரஷித் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
(ஜேசன் ராய்)
இதையடுத்து 311 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை பந்தாடியது. 44.4 ஓவர்களிலேயே நான்கு விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராய் 83 பந்துகளில் 101 ரன்களும் பேர்ஸ்டோவ் 79 ரன்களும் பட்லர் 29 பந்தில் 54 ரன்களும் எடுத்தனர். ஜேசன் ராய் ஆட்டநாயகன் விருது பெற்றார்.