வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில், ஜேசன் ராய், ஜோ ரூட் ஆகியோரின் சிறப்பான சதத்தால் இங்கிலாந்து அணி மிரட்டல் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடர் இப்போது நடந்து வருகிறது.
முதலாவது போட்டி, பிரிட்ஜ்டவுனில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணிக்குத் திரும்பிய தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்லும் கேம்பலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால், தொடக்கத்தில் மெதுவாக ஆடிய கெய்ல், அடுத்து அதிரடியில் இறங்கினார். அவர் 129 பந்தில் 12 சிக்சர், 3 பவுண்டரியுடன் 135 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இது அவருக்கு 24-வது சதம். அவர் அடித்த சிக்சர் ன்று மைதானத்துக்கு வெளியே சென்றது. அந்த அணி, 50 ஒவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 360 ரன் குவித்தது.
விக்கெட் கீப்பர் சாய் ஹோப் 64 ரன்னும் டேரன் பிராவோ 30 பந்தில் 40 ரன்னும் கடைசி கட்டத்தில் இறங்கிய நர்ஸ், 8 பந்தில் 25 ரன்னும் விளா சினர். இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ், அடில் ரஷித் தலா 3 விக்கெட்டுகளும் வோக்ஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் 361 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 48.4 ஓவரில் 364 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராயும் (85 பந்தில் 123 ரன்) ஜோ ரூட்டும் (102 ரன்) அபார சதம் அடித்தனர். ஜேசன் ராய் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
கெய்ல் சாதனை
இந்த போட்டியின் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் (டி20 , ஒரு நாள், டெஸ்ட் போட்டி சேர்த்து) அதிக சிக்சர் அடித்தவர் என்ற சாதனையை, கிறிஸ் கெய்ல் படைத்தார். அவர் 477 சிக்சர்கள் அடித்துள்ளார். இந்த சாதனை பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஷாகித் அப்ரிதியை அவர் முந்தினார்.
உலகக் கோப்பை போட்டியுடன் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக, சமீபத்தில் கெய்ல் அறிவித்திருந்தார் என்பது குறிப் பிடத்தக்கது.