இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் இரட்டை சதம் அடித்தார்.
இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிட்ஜ்டவுனில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி, 289 ரன்களில் ஆட்டம் இழந்தது. அதிகப்பட்சமாக ஹெட்மையர் 81 ரன் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில், ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளும் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து, யாரும் எதிர்பார்க்காத வகையில் 77 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. கெமர் ரோச் 27 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். இந்த மைதானத்தில் ஒரு அணியின் மோசமான ஸ்கோர் இது.
அடுத்து 212 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில், அந்த அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் இரட்டை சதம் அடித்தார். அவர் 229 பந்துகளில் 8 சிக்சர், 23 பவுண்டர்களுடன் 202 ரன் குவித்தார். அவருக்கு துணையாக நின்ற டாவ்ரிச் 116 ரன்கள் எடுத்தார். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி, 415 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. பின்னர் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. அந்த அணி, வெற்றி பெற இன் னும் 572 ரன்கள் தேவை என்ற நிலையில் தடுமாறி வருகிறது.