விளையாட்டு

இது எனக்கு ஸ்பெஷல் வெற்றி: விராத் கோலி!

webteam

டர்பனில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்றது ஸ்பெஷலானது என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி கூறினார். 

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவிடம் இழந்த இந்திய அணி, இப்போது ஆறு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒரு நாள் போட்டி டர்பனில் நேற்று நடந்தது.

டாஸ் வென்று முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 269 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளிசிஸ் 120 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் குல்தீப் 3 விக்கெட்டும், சேஹல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி, 4 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. விராத் கோலி சதமடித்தார். ரஹானே 79 ரன்கள் எடுத்தார்.

ஆட்ட நாயகன் விருது பெற்ற விராத் கோலி, கூறும்போது, ’எந்த ஒரு தொடரிலும் முதல் போட்டி முக்கியமானது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. இது எனக்கு ஸ்பெஷல். தென்னாப்பிரிக்க அணியை 270 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது சிறப்பாக இருந்தது. எங்கள் அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் (சேஹல், குல்தீப்) சிறப்பாக செயல்பட்டு விக்கெட்  வீழ்த்தினார்கள். அவர்கள் தென்னாப்பிரிக்காவில் இப்போதுதான் முதல் முறையாக விளையாடுகிறார்கள். முதல் போட்டியிலேயே அவர்கள் சிறப்பாக பந்துவீசி விக்கெட் எடுத்தது சிறப்பானது’ என்றார்.