விளையாட்டு

ஒரே ஓவரில் ஆறு சிக்சர் அடிக்க நினைத்தேன்: மில்லர் மெர்சல்!

ஒரே ஓவரில் ஆறு சிக்சர் அடிக்க நினைத்தேன்: மில்லர் மெர்சல்!

webteam

‘ஒரே ஓவரில் ஆறு சிக்சர் அடிக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் அது முடியாமல் போய்விட்டது’ என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் மில்லர் கூறினார்.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2வது டி 20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றிபெற்றது. 10வது ஓவரில் களமிறங்கிய மில்லர், பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களை பந்தாடினார். வேகப்பந்து வீச்சாளர் முகமது சைபுதீனின் (19-வது ஓவர்) பந்து வீச்சில் தொடர்ந்து 5 சிக்சர்களை பறக்கவிட்ட அவர், 6வது பந்தையும் சிக்சராக்கி யுவராஜ் சிங் சாதனையை சமன் செய்வார் என எதிர்பார்த்தனர். ஆனால், கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். அவர் 35 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்தார். சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் இதுதான் அதிவேக சதம். 

இந்த சாதனை பற்றி மில்லர் கூறும்போது, ’காலையில் எழுந்துகொள்ளும்போது, இப்படியெல்லாம் நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. எனக்கும் அப்படித்தான். எல்லோருக்கும் எப்போதும் வாய்ப்பு கிடைத்துவிடாது. எனக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. அதைப் பயன்படுத்திக்கொண்டேன். சைபுதீனின் பந்துவீச்சில் நான்கு சிக்சர்களை அடித்த பின்தான், ஆறு சிக்சர்களை அடிக்கும் எண்ணம் தோன்றியது. ஆனால் ஐந்து சிக்சர் மட்டுமே அடிக்க முடிந்தது. ஆட்டம் முடிந்த பின் சைபுதீனிடம், ‘இன்னைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை’ என்று சொன்னேன்’ என்றார்.