விளையாட்டு

’அது அந்த வருஷம், இது புது வருஷம்’: சர்ச்சை பற்றி மித்தாலி ராஜ்!

’அது அந்த வருஷம், இது புது வருஷம்’: சர்ச்சை பற்றி மித்தாலி ராஜ்!

webteam

’’மகளிர் கிரிக்கெட் சர்ச்சை நடந்தது, கடந்த ஆண்டு. அதை மறந்துவிட்டு புது வருடத்துக்கு வந்துவிட்டோம்’’ என்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் கூறினார்.

வெஸ்ட் இண்டீஸில் கடந்தாண்டு நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி, இங்கிலாந் திடம் தோற்று வெளியேறியது. இந்த முக்கியமான போட்டியில் சாதனை வீரர் மித்தாலி ராஜ் ஆடும் லெவனில் சேர்க்கப்படாமல் ஓரங்கட்டப்பட்டார். இத்தனைக்கும் அந்தத் தொடரில் அவர் சிறப்பாக விளையாடினார். இதையடுத்து மித்தாலியின் மானேஜர் அனிஷா குப்தா, டி20 கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரை கடுமையாக விளாசினார். 


இதையடுத்து மித்தாலி ராஜ், டி20 கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், பயிற்சியாளர் ரமேஷ் பவார் மீது கடும் குற்றச்சாட்டுகளை வைத்தார். இது சர்ச் சையை ஏற்படுத்தியது. பின்னர் இந்த விவகாரம் குறித்து, இந்திய கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தியது. அப்போது கிரிக்கெட் வாரிய உறுப் பினர் டயானா எடுல்ஜி, மித்தாலிக்கு எதிராக கருத்துத் தெரிவித்தார். இந்நிலையில் ரமேஷ் பவார் பதவி காலம் முடிந்து புதிய பயிற்சியாளராக, தமிழகத்தைச் சேர்ந்த டபிள்யூ.வி. ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மித்தாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் அணி, நியூசிலாந்து சென்று விளையாட இருக்கிறது. இதற் காக இந்திய அணி நேற்று அங்கு புறப்பட்டுச் சென்றது. 

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த மித்தாலி ராஜ் கூறும்போது, ‘’ அந்த சர்ச்சையை இருவருமே மறந்துவிட்டோம். அது நடந்தது, கடந்த ஆண்டு. இப்போது 2019 ஆம் ஆண்டில் இருக்கிறோம். அதை விட்டுவிட்டு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிட்டோம். அந்த பிரச்னைக்கு தேவை யில்லாமல் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுவிட்டதாக நினைக்கிறேன். இப்போது மீண்டும் ஒன்றாக விளையாடும் வாய்ப்பு கிடைத்திருக் கிறது. இதில் அனைவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

வெளிநாட்டில் தொடரை வெல்ல வேண்டும் என்றால் அணியில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியம். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அணி என்று வந்துவிட்டால், அதன் நலனைதான் அனைவரும் பார்க்க வேண்டும். அதன்படி நியூசிலாந்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’’ என்றார்.