விளையாட்டு

அரையிறுதிக்கு தகுதி பெறாதது துரதிர்ஷ்டம்: பாக். கேப்டன் வருத்தம்

அரையிறுதிக்கு தகுதி பெறாதது துரதிர்ஷ்டம்: பாக். கேப்டன் வருத்தம்

webteam

உலகக் கோப்பை தொடரில், அரையிறுதியில் பங்கேற்காமல் வெளியேறுவது துரதிர்ஷடமானது என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமது தெரிவித்தார். 

உலகக் கோப்பை தொடரில் நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான் -பங்களாதேஷ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்களைக் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் சதமடித்தார். பாபர் ஆஸம் 96 ரன்னில் ஆட்டமிழந்தார். 

316 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய பங்களாதேஷ் அணி, 45 ஆவது ஓவரிலேயே அனைத்து விக்கெட்டு களையும் இழந்து 221 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஷாஹின் ஷா அப்ரிதி 6 விக்கெட்டு களை வீழ்த்தினார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  நெட் ரன் ரேட் குறைவாக இருந்ததால் பாகிஸ்தான் அணி, அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது.

பின்னர் பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறும்போது, ‘’ நாங்கள் சிறப்பான கிரிக்கெட்டை ஆடினோம். இருந்தாலும் அரையிறுதிக்குச் செல்ல முடியாதது மிகவும் துரதிர்ஷ்டம். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்விக்குப் பிறகு எங்கள் வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த தொடரின் ஆரம்பத்தில் எங்கள் அணியின் கல வை சரியானதாக அமையவில்லை. வேறு காம்பினேஷனில் ஆடினோம். வேகப்பந்துவீச்சாளர் ஷாஹின் ஷா, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹரிஸ் சோஹைல் ஆகியோர் வந்தபிறகு அணி சிறப்பாகிவிட்டது.

கடந்த நான்கு போட்டிகளில் அருமையான ஆட்டத்தை வீரர்கள் வெளிப்படுத்தினார்கள். இந்த தொடரில் பாபர் ஆஸம், இமாம், ஹரிஸ் உட்பட வீரர்கள் ஆடிய விதம் நன்றாக அமைந்தது. வேகப்பந்துவீச்சாளர் ஷாஹின் ஷா, கடந்த 4 போட்டிகளில் ஆடிய விதம் ஊக்கமளிப்பதாக இருக்கிறது. தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் வீழ்த்துவது கடினம். குறிப் பாக இன்றைய (நேற்று) போட்டியில் அவர் சிறப்பாக வீசினார். நான் பார்த்ததில் இதுதான் சிறப்பான பந்துவீச்சு என்று சொல் வேன்’’ என்றார்.