விளையாட்டு

கோலி 100 சதங்களை அல்ல! 110 சதங்களை விளாசுவார்! - பாக். முன்னாள் வீரர் நம்பிக்கை!

ச. முத்துகிருஷ்ணன்

விராட் கோலி 100 சதங்களை அல்ல! 110 சதங்களை விளாசுவார் என்று முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டில் தனது கடைசி சர்வதேச சதத்தை அடித்ததில் இருந்து விராட் கோலியின் ஃபார்மில் சரிவு விவாதத்திற்குரிய விஷயமாக உள்ளது. முன்னாள் இந்திய கேப்டன் கோலி தற்போது மோசமான பேட்டிங் சரிவுகளில் ஒன்றைக் காண்கிறார். முதல் முறையாக மூன்று அசாதாரண 'கோல்டன் டக்'களை பதிவு செய்துள்ளார். தற்போதைக்கு, 100-க்கும் மேற்பட்ட போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்காமல் அவர் விளையாடி வருகிறார்.

இந்தாண்டு கடுமையான ஐபிஎல் சீசனை எதிர்கொண்ட போதிலும், சச்சின் டெண்டுல்கரின் 100 சர்வதேச சதங்கள் என்ற மைல்கல்லை கோலி முறியடிப்பதைக் காண விரும்பும் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கோலிக்கு ஆதரவாக பேசியுள்ளார். கோலி தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 27 சதங்களையும், ODI வடிவத்தில் 43 சதங்களையும் பெற்றுள்ளார். அவரது ஒட்டுமொத்த சதங்களின் எண்ணிக்கையை 70 ஆக உள்ளது.

"உங்கள் கேரியரின் இறுதிக் கட்டத்தில், ஒவ்வொரு போட்டியிலும் செயல்படுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. உங்கள் மீது நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. கோலிக்கு என்ன நடக்கப் போகிறது என்பது கடவுளுக்குத் தெரியும், ஆனால் அவர் 110 சதங்கள் அடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். அவரது இலக்குகளை பெரியதாக வைத்திருங்கள். ஆனால் இந்த நேரத்தில், அவரது நம்பிக்கையும் மன உறுதியும் குறைந்திருக்க வேண்டும். அது அதிகரிக்கும் ஒரே வழி, இந்தியாவுக்காக விளாயாடுகிறோம் என்று நினைத்து களம் காண்பதுதான்" என்று அக்தர் கூறினார்.