நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புனேவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 9 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணியில் தவான் 68 ரன்களும் தினேஷ் கார்த்திக் 64 ரன்களும் எடுத்தனர்.
அரைசதம் அடித்தது குறித்து தினேஷ் கார்த்திக் கூறும்போது, ‘மிடில் ஆர்டரில் இறங்கும்போது களத்தில் அதிக நேரம் செலவிடுவது முக்கியம். எனக்கு அது மிகவும் முக்கியம். அணியின் வெற்றிக்கு நானும் உதவியிருப்பதில் மகிழ்ச்சி. என் மீது நம்பிக்கை வைத்துள்ள அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கும் கேப்டன் விராத் கோலிக்கும்தான் இந்த பெருமை சேரும். பிட்ச்சின் தன்மை கடினமாக இருந்தது. பந்து நன்றாக திரும்ப ஆரம்பித்துவிட்டதால், நான் நினைத்தது போல சரியாக திருப்ப முடியவில்லை. இருந்தாலும் அதிக நேரம் களத்தில் நின்று ரன்கள் குவித்தது நம்பிக்கை அளித்திருக்கிறது’ என்றார்.