இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு பயணம் செய்து மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த அணியை ராகுல் டிராவிட் பயிற்சியாளராக வழிநடத்த உள்ளார். இந்நிலையில் அவரது பயிற்சி குறித்த நினைவலைகளை பகிர்ந்துள்ளார் இந்திய அணியின் இளம் வீரர் பிருத்வி ஷா.
“ராகுல் சாரின் பயிற்சியின் கீழ் விளையாடுவது மாறுபட்ட அனுபவமாக இருக்கும். அது ஒருவிதமான மஜாவாக இருக்கும். அண்டர் 19 அணிக்கு அவர்தான் எங்களது பயிற்சியாளர். அவரது பேச்சு தொடங்கி கிரிக்கெட் அனுபவங்களை பகிர்வது வரையில் அது ஒரு தனி சுகம். அவருக்கு கிரிக்கெட் குறித்து அனைத்தும் தெரியும். சூழலுக்கு ஏற்ப எப்படி நம்மை தகவமைத்துக் கொண்டு விளையாட வேண்டுமென்ற நுணுக்கங்களையும் அவர் சொல்வார். அது வேற லெவலாக இருக்கும்.
ராகுல் சார் எங்களுடன் இருப்பதால் வீரர்களின் டிரஸ்சிங் ரூமில் ஒரு ஒழுக்கம் இருக்கும். அவரது பயிற்சியின் கீழ் விளையாட ஆர்வமாக உள்ளேன். நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியில் எனக்கான இடத்தை நிரந்தரமாக பிடிப்பேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
பிருத்வி ஷா இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட வாய்ப்புகள் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.