விளையாட்டு

விரட்டும் கொரோனா.. பார்வையாளர்கள் இல்லாமல் ஐஎஸ்எல் கால்பந்து இறுதிப்போட்டி..!

rajakannan

கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சம் காரணமாக ஐஎஸ்எல் கால்பந்து இறுதிப் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎஸ்எல் எனும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தொடர் தோல்விகளுடன் தொடரை தொடங்கிய சென்னை அணி, தோல்விகளின் பிடியிலிருந்து விடுபட்டதோடு மட்டுமின்றி அரையிறுதிக்கே முன்னேறி வியக்க வைத்தது. நடப்பு சீசனில், சென்னை விளையாடிய முதல் ஆறு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டது.

இதனையடுத்து, முதல் கட்ட அரையிறுதி போட்டியில் பலம் வாய்ந்த கோவா அணியை தோற்கடித்தது சென்னை அணி. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் சென்னை அணி 2-4 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தாலும் கோல்கள் அடிப்படையில் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றியது. அதேபோல், கொல்கத்தா அணி முதல் அரையிறுதியில் பெங்களூரு எஃப்சி அணியிடம் 0-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இருப்பினும், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் 3-1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேற்றியது.

இந்நிலையில், கொல்கத்தா மற்றும் சென்னையின் எஃப்சி அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி வருகின்ற 14ம் தேதி இரவு 7.30 மணிக்கு கோவாவில் உள்ள நேரு மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஐபிஎல் போட்டிகளைப் போலவே ஐஎஸ்எல் போட்டிகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதனால், இறுதிப் போட்டிக்கு அதிக ரசிகர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐஎஸ்எல் இறுதிப்போட்டியை பார்வையாளர்கள் இல்லாமல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கால்பந்து விளையாட்டு மேம்பாட்டு லிமிடெட் (Football Sports Development Limited) இந்த தகவலை வெளியிட்டுள்ளது.