2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு விளையாட்டு வீரரின் உயர்ந்தபட்சக் கனவு ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதுதான். உலகப்போர் ஏற்பட்டதால் 1916, 1940, 1944 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டி நடைபெறவில்லை. 2016ல் பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீரோவில் நடைபெற்றது. வரும் 2020-ல் ஜப்பானின் டோக்கியோ நகரில் 32-வது ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. மேலும் 2024 ஆம் ஆண்டு 33-வது ஒலிம்பிக் பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலும், 34-வது ஒலிம்பிக் 2028-ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும் நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில் 35-வது ஒலிம்பிக் போட்டி மற்றும் 2030 ஆம் ஆண்டில் ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்த மத்திய அரசின் அனுமதியை எதிர்நோக்கியுள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் கூறியிருந்தது. ஆனால் செலவீனங்களைக் கருத்தில் கொண்டு எச்சரிக்கையுடன் செயல்பட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், போட்டிகளை நடத்துவது பற்றி பல்வேறு மட்டத்தில் ஆய்வு செய்ய விளையாட்டுத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.