விளையாட்டு

ஐபிஎல் இல்லாததால் தவித்த சிஎஸ்கே ஊழியர் - ரூ25 ஆயிரம் கொடுத்து உதவிய இர்ஃபான் பதான்

webteam

சிஎஸ்கே அணியின் காலணிகளை சீர்செய்து கொடுக்கும் தொழிலாளிக்கு இர்ஃபான் பதான் 25 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்று காரணமாக அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆகவே அனைத்து கிரிக்கெட் வீரர்களும் சமூக வலைத்தளத்தில் வாழ்க்கையை நடத்திக் கொண்டு உள்ளனர். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் மூழ்கியுள்ளனர். சச்சின் உள்ளிட்ட சில வீரர்கள் ஊரடங்கினால் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதானும், அவரது சகோதரர் யூசுப் பதானுடன் சேர்ந்து கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக பொது மக்களுக்கு முகக்கவசங்கள், உணவு பொட்டலங்கள் மற்றும் மருந்துகளை வழங்கி உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இர்ஃபான் பதான் செய்த ஒரு உன்னதமாக உதவி பலரது இதயங்களை ஈர்த்துள்ளது. சமீபத்தில் அவர், ‘சென்னை சூப்பர் கிங்ஸ் ’ அணியின் காலணிகளை சீர்செய்யும் அதிகாரப்பூர்வமான தொழிலாளி ஆர்.பாஸ்கரனுக்கு 25,000 ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். ஊரடங்கினால் சென்னையில் நடக்க இருந்த ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டதால் இவர் மிகுந்த சிரமத்தில் சிக்கித் தவித்துள்ளார். வருமானம் இன்றி தவித்த பாஸ்கரனின் நிலைமையை அறிந்த இர்ஃபான் இந்த உதவியை செய்துள்ளார். அதுவும் சென்னையைச் சேர்ந்த தமிழர் ஒருவருக்கு இவர் உதவிக்கரம் நீட்டியுள்ளதால் சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகத்தில் இர்ஃபானை வாழ்த்தி வருகின்றனர்.

‘ஈஎஸ்பிஎன் க்ரிகின்ஃபோ’வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி பாஸ்கரன், 1993 முதல் சென்னையின் வாலஜா சாலையில் கடை அமைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த 12 ஆண்டுகளாக, இவர் சிஎஸ்கே வீரர்களின் காலணிகளை சீர்செய்து தரும் அதிகாரப்பூர்வ தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

இந்தியாவுக்காக இர்ஃபானுடன் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக், அவரது ட்விட்டர் பக்கத்தில் இர்ஃபானை பாராட்டியுள்ளார். அவரது பதிவில், “சிறிய தேவையை அறிந்து செய்தது பெருந்தன்மை. சிறப்பு விஷயம் இர்பான் பாதன். இந்த மாதிரி மோசமான தருணங்களில் நேர்மையான விஷயங்களை வெளிப்படுத்துவது இனிமையானது” எனக் கூறியுள்ளார்.

இது குறித்து பாஸ்கரன், “எனக்கு ஒரு போட்டியின்போது ரூ .1000 கிடைக்கும். சிஎஸ்கே வீரர்கள் என்னை நன்றாக கவனித்துக் கொண்டார்கள். சீசனின் முடிவில், வீரர்களும் பயிற்சியாளர்களும் உதவுவார்கள். கடந்த ஆண்டு, தோனி எனக்கு தனித்தனியாக கொடுத்ததைத் தவிர்த்து இப்போது ரூ.25,000 கிடைத்துள்ளது” என்று ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்த ஆண்டு, என் மகன்களும் எந்த வேலையும் இல்லாமல் இருக்கிறார்கள். நான் கொஞ்சம் சேமித்து வைத்திருந்தேன். அதை வைத்து சமாளித்தேன். இதைபோன்ற நாள் வரும் என்று எனக்குத் தெரிந்திருந்தால், நான் இன்னும் சேமித்திருப்பேன். கடந்த வாரம் இர்ஃபான் பதான் கொஞ்சம் பணம் (ரூ.25,000) அனுப்பினார். நான் குடும்பத்திற்கான மளிகை சாமான்களை வாங்கினேன். வேலை இல்லாததால், நான் கடன் வாங்கியிருந்தேன். அதை திருப்பிக் கொடுக்க வேண்டும். நான் எப்படி பிழைப்பேன் என்று எனக்குத் தெரியாது. கிரிக்கெட் விரைவில் தொடங்கவில்லை என்றால், நான் போய்விடுவேன் ”என்று கூறியுள்ளார்.