விளையாட்டு

அனைத்து போட்டிகளும் ரத்து : காஷ்மீரிலிருந்து கிரிக்கெட் வீரர்கள் வெளியேற அறிவுறுத்தல்

அனைத்து போட்டிகளும் ரத்து : காஷ்மீரிலிருந்து கிரிக்கெட் வீரர்கள் வெளியேற அறிவுறுத்தல்

webteam

ஜம்மு-காஷ்மீரில் பதட்டமான சூழல் நிலவும் நிலையில், அங்கு நடக்கவிருந்த அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜம்மு- காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை செல்லும் வழியில் இருந்து நவீன ரக துப்பாக்கிகள் மற்றும் கண்ணிவெடிகள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த ஆயுதங்கள் அனைத்தும் பாகிஸ்தானின் ஆயுத கிடங்கில் தயாரிக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அமர்நாத் யாத்திரை உடனடியாக நிறுத்தப்பட்டு, தரிசனம் முடித்த‌ பக்தர்கள் விரைவாக சொந்த ஊர்களுக்கு திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டது. அத்துடன் காஷ்மீரில் பதட்டம் நீடிக்கும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில் காஷ்மீரில் நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக பயிற்சி எடுத்துவந்த 100க்கும் மேற்பட்ட கிரிக்கெட் வீரர்களை உடனே வெளியேற பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது. காஷ்மீரில் வரும் 17ஆம் தேதி துல்தீப் கோப்பை தொடரும், அதைத் தொடர்ந்து விஜய் ஹசாரே கோப்பை போட்டியும் நடைபெறவிருந்தது. 

அத்துடன் டிசம்பர் 9ஆம் தேதி ராஞ்சிக் கோப்பை தொடர் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக 8 அணிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வீரர்கள் ஷெர்-ஐ-காஷ்மீர் மைதனாத்தில் பயிற்சி எடுத்து வந்தனர். இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்ளிட்டவர்களும் அடங்குவர். இந்நிலையில் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தவிர்த்து மற்ற வீரர்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தெரிகிறது.