விளையாட்டு

வெடித்தார் தோனி: கோயங்கா கப்சிப்

வெடித்தார் தோனி: கோயங்கா கப்சிப்

webteam

ஐபிஎல் தொடரில், தோனியின் சிறப்பான ஆட்டத்தால் புனே அணி மூன்றாவது வெற்றியை ருசித்தது. ஹைதராபாத் அணிக்கு எதிரான விறுவிறுப்பான ஆட்டத்தில் கடைசி பந்தில் புனே அணி திரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஹைதராபாத் அணியும் புனே அணியும் நேற்று மோதின. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 176‌ ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹென்ரிகஸ் 28 பந்துகளில் 55 ரன்கள் விளாசினார். கேப்டன் வார்னர் 43 ரன்கள் எடுத்தார்.

177 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய புனே அணியில் கேப்டன் ஸ்மித் 27 ரன்களிலும், ராகுல் திரிபாதி,‌ 59 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் தோனியும், மனோஜ் திவாரியும் இணைந்து வேகமாக ரன்கள் சேர்க்க, கடைசிப்பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை புனே அணிக்கு ஏற்பட்டது. கடைசிப்பந்தை பவுண்டரிக்கு விளாசி தோனி வெற்றியை தேடித்தந்தார். 34 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் விளாசிய தோனி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

கடந்த சில ஆட்டங்களில் சரியாக ரன் எடுக்காத தோனி விமர்சனத்துக்குள்ளானார். அவரை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலர் கடுமையாக விமர்சித்தனர். அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் தோனி.

புனே அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவின் சகோதரர் ஹார்ஷ் கோயங்கா, சரியாக ரன் எடுக்காத தோனியை மறைமுகமாகச் சாடியிருந்தார். இதற்கு தோனி ரசிகர்களிடம் சமூக வலைத்தளங்களில் கடுமையாக வாங்கிக்கொண்டார் அவர். இந்நிலையில், இப்போது தோனியை புகழ்ந்து தள்ளியுள்ளார் அவர். ’தோனியை இப்படி பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஆட்டத்தை முடிப்பதில் வல்லவர் என்பதை அவர் மீண்டும் நிரூபித்திருக்கிறார் என டிவிட்டரில் கூறியுள்ளார்.