ஐபிஎல் தொடரில் புனேவில் நடைபெறுவதாக இருந்த இரண்டு பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளன. ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா இதனை உறுதி செய்துள்ளார்.
11வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் 56 லீக் போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் சொந்த மண்ணில் ஒரு முறையும், மற்ற அணிகளின் மைதானத்தில் ஒரு முறையும் மோதும். லீக் போட்டிகளின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.
பிளே ஆஃப் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிக்கு முதல் தகுதிச் சுற்றுப் போட்டி நடைபெறும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அதேபோல், 3வது, 4வது இடங்களை பிடித்த அணிகளிடையே எலிமினேட்டர் சுற்றுப் போட்டி நடைபெறும். எலிமினேட்டர் சுற்றில் தோல்வி அடைந்த அணி வெளியேறும். வெற்றி பெற்ற அணி முதல் தகுதிச் சுற்றில் தோல்வி அடைந்த அணியுடன் மோதும். இந்த இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் வெற்றிப் பெற்ற அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெறும்.
முதல் தகுதிச் சுற்று மற்றும் இறுதிப் போட்டிகள் மும்பையில் நடைபெறுகிறது. அதேபோல், எலிமினேட்டர் மற்றும் இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டிகள் புனேவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், புனேவில் நடைபெறவிருந்த போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புனேக்கு மாற்றப்பட்டுள்ளதால் பாதுகாப்பு சிக்கல் ஏற்படும் என்று கூறி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டி விவரம்:-
மே 22 - முதல் தகுதிச் சுற்று - இரவு 8 மணி - மும்பை
மே 23 - எலிமினேட்டர் - இரவு 8 மணி - கொல்கத்தா
மே 25 - இரண்டாவது தகுதிச் சுற்று - இரவு 8 மணி - கொல்கத்தா
மே 27 - இறுதிப் போட்டி - இரவு 8 மணி - மும்பை