ஐபிஎல் லீக் போட்டிகள் கடைசி கட்டத்தை நெருங்கும் நிலையில் ப்ளே ஆஃப் சுற்றில் எந்தெந்த அணிகள் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2019ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் ஒரு அணிக்கு 14 போட்டிகள் என்ற கணக்கில் மொத்தம் 56 லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற 7 அணிகளுடன் 2 போட்டிகளில் மோதும். இறுதியாக புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடத்தை பிடிக்கும் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். ஒரு அணி தாங்கள் விளையாடும் 14 போட்டிகளில் 8 போட்டிகளை வென்றால், ப்ளே ஆஃபிற்கு தகுதி பெற்றுவிடும். அதையும் மீறி 9 அல்லது 10 போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் முதல் இரண்டு இடத்தை பிடிக்கும்.
இதேபோன்று சில அணிகள் 7 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றாலும், மற்ற அணிகளும் 7 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும் பட்சத்தில் ரன் ரேட் அடிப்படையில் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் இடம் பெற வாய்ப்பு உள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இதுவரை 45 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், இன்று 46 மற்றும் 47வது போட்டிகள் நடைபெறுகின்றன. புள்ளிகள் பட்டியலின் தற்போதைய நிலவரப்படி 12 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் 8 போட்டிகளை வென்று 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. எனவே சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றில் விளையாடும் என்பது உறுதியாகிவிட்டது. அதை தவிர்த்து ப்ளே ஆஃப் சுற்றில் இடம்பெறும் மற்ற மூன்று அணிகள் எவை என்பதை, இருக்கும் நடைமுறை சாத்தியங்களை வைத்து கணிக்க முடியும்.
சென்னை அணிக்கு அடுத்த படியாக புள்ளிகள் பட்டியளில் இருக்கும் அணிகள் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ். இரு அணிகளும் தலா 11 போட்டிகளில் 7 போட்டிகளை வென்று 14 புள்ளிகளுடன் இருக்கின்றன. இந்த இரு அணிகளும் மீதமுள்ள 3 போட்டிகளில் ஒரு போட்டியில் வென்றாலும் ப்ளே ஆஃப் சுற்றில் இடம்பிடிப்பதை உறுதி செய்துவிடும். இதில் டெல்லி அணி இன்று பெங்களூர் அணியுடன் மோதுகிறது. அத்துடன் மே ஒன்றாம் தேதி சென்னை அணியுடனும், மே 4ல் ராஜஸ்தான் அணியுடனும் மோதவுள்ளது. மும்பை அணி இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனும், 2ஆம் தேதி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனும், மே 5ஆம் தேதி மீண்டும் கொல்கத்தா அணியுடனும் மோதவுள்ளது.
இந்த இரண்டு அணிகளும் இனி ஒரு போட்டியில் கூட நேருக்கு நேர் மோதிக்கொள்ளவில்லை. எனவே இவற்றின் ரன் ரேட் நேரடி பாதிப்பையோ அல்லது நேரடியாக இரண்டு அணிகளில் ஒன்றின் புள்ளிகள் சரிவையோ அல்லது உயர்வையோ பெறாது. எடுத்துக்காட்டாக ஒரு அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றாலும், தோற்றாலும் அது மற்ற அணியை பாதிக்காது. எனவே இவை இரண்டிற்குமே ப்ளே ஆஃபில் இடம்பெற வாய்ப்புகள் மிக அதிகம். ப்ளே ஆஃபில் கண்டிப்பாக இடம்பெறும் என்றே சொல்லலாம்.
இவைகளுக்கு அடுத்த படியாக புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் உள்ளன. இந்த இரண்டு அணிகளுமே தலா 11 போட்டிகள் விளையாடி 5 போட்டிகளை வென்று 10 புள்ளிகளுடன் உள்ளன. இந்த இரண்டு அணியில் ஹைதராபாத் அணி ரன் ரேட்டில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் நாளை இரவு 8 மணிக்கு இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. இதில் பஞ்சாப் அணி தோற்றால் ப்ளே ஆஃப் வாய்ப்பை இழக்கும். ஆனால் ஹைதராபாத் அணி தோற்றாலும், அடுத்த இரண்டு போட்டிகளிலும் அதிக ரன்கள் அல்லது அதிக விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் ப்ளே ஆஃபிற்கு நுழையும். எனவே ப்ளே ஆஃப் சுற்றுக்காக போராடும் அணிகள் இவை இரண்டுமே உள்ளன.
இந்த 5 அணிகளுக்கும் அடுத்த படியாக உள்ள, ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய மூன்று அணிகளுக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. ராஜஸ்தான் அணி 12 போட்டிகள் விளையாடி 5 போட்டிகளை மட்டுமே வென்றுள்ளது. இந்த அணி மீதமுள்ள இரண்டு போட்டிகளை வென்றாலும், ரன் ரேட் குறைவாக உள்ளதால் வாய்ப்பு குறைவு. கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணி தலா 11 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளை மட்டுமே வென்றுள்ளது.
இவை இரண்டுமே அடுத்துள்ள மூன்று போட்டிகளில் வென்றாலும் வாய்ப்பு குறைவு. இதில் பெங்களூர் ராஜஸ்தான் அணிகள் ஒரு போட்டியில் நேருக்கு நேர் மோதுவதால் அவற்றில் ஒன்றிற்கு கட்டாயம் வாய்ப்பில்லை. இதையும் மீறி இந்த மூன்று அணியில் ஒன்று அனைத்து போட்டிகளையுமே அதிக ரன்கள் அல்லது அதிக விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றாலும் ரன் ரேட்டில் வாய்ப்பு கிடைப்பது கடினம் தான். ஏதேனும் மேஜிக் நடந்தால் தான் இவைகள் ப்ளே ஆஃபில் இடம்பிடிக்க முடியும்.
தற்போது உள்ள நிலவரப்படியும், இனி நடைபெறவுள்ள போட்டிகளின் வைத்தும் பார்க்கும்போது சென்னை, டெல்லி, மும்பை மற்று ஹைதராபாத் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றில் இடம் பெறும் என்பது கிரிக்கெட் வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது.