விளையாட்டு

“சொந்த நாட்டுக்கு பறக்கும் ஃபாரின் ப்ளேயர்கள்” - ப்ளே ஆஃபில் எந்த அணி காலி ?

“சொந்த நாட்டுக்கு பறக்கும் ஃபாரின் ப்ளேயர்கள்” - ப்ளே ஆஃபில் எந்த அணி காலி ?

webteam

ஐபிஎல் போட்டிகள் ப்ளே ஆஃப் சுற்றை நெருங்கும் நிலையில் வெளிநாட்டு வீரர்கள் உலகக் கோப்பைக்காக சொந்த நாட்டுக்கு திரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்புடன் ப்ளே ஆஃப் சுற்றை நெருங்கியுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன. மும்பை இந்தியன்ஸ் அணி ஏறத்தாழ இடம்பிடித்துவிட்டது. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு உறுதியாக தேர்வாகிவிடும். அதற்கு அடுத்தபடியாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளில் ஒன்று ப்ளே ஆஃப் சுற்றில் இடம்பெற வாய்ப்பு உள்ளது. இதற்கிடையே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் முன்னேறி வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் நான்காம் இடத்துக்கான போட்டியில் உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  அணி கிட்டத்தட்ட தன்னுடைய வாய்ப்பை இழந்துவிட்டது என்றே கூறலாம். 

 மே மாதம் 30ஆம் தேதி உலகக் கோப்பை போட்டி தொடங்குவதால் மே 2வது வாரம் சொந்த நாடு திரும்புமாறு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் உத்தரவிட்டுள்ளன. ஏற்கனவே இங்கிலாந்து வீரர்கள் சொந்த நாட்டிற்கு புறப்பட்டுவிட்டனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சொந்த நாடு திரும்புமாறு வீரர்களுக்கு உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை. எனவே அவர்கள் இறுதிவரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார்கள் என நம்பப்படுகிறது. இதேபோன்று நியூஸிலாந்து அணியும் எந்த உத்தரவும் பிறப்பிக்காவிட்டாலும், அந்த அணியின் முக்கிய வீரர்கள் மே 2வது வாரத்திற்கு பிறகு விளையாடுவது சந்தேகம் தான். 

இந்நிலையில் அடுத்து வரும் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் இன்றி விளையாடும் ஐபிஎல் அணிகளில் யார் யாருக்கு என்ன சரிவுகள் ஏற்படும் என்பதை காண்போம். 

தற்போது ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணியில் கோலின் இன்கிராம் (தென் ஆப்பிரிக்கா), ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு (வெஸ்ட் இண்டீஸ்), கஜிசோ ரபாடா (தென் ஆப்பிரிக்கா), கிரிஸ் மோரிஸ் (தென் ஆப்பிரிக்கா), ட்ரெண்ட் போல்ட் (நியூஸிலாந்து), கீமோ பவுல் (வெஸ்ட் இண்டீஸ்), கோலின் முன்ரோ (நியூஸிலாந்து) ஆகியோர் வெளிநாட்டு வீரர்களாக உள்ளனர். 

இதில் கோலின் இன்கிராம், கிரிஸ் மோரிஸ் ஆகியோர் தென் ஆப்பிரிக்கா உலகக்கோப்பை அணியில் இடம்பெறவில்லை. எனவே அவர்கள் ஐபிஎல் போட்டியில் இறுதிவரை விளையாடுவார்கள். ஆனால் டெல்லியின் முக்கிய பவுலரான ரபாடா உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளார். எனவே அவர் விரைவில் பறந்துவிடுவார். இது டெல்லி அணிக்கு பந்துவீச்சில் பெரும் இழப்பாகும். 

நியூஸிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட் ஒருசில போட்டிகளிலேயே விளையாடினார். உலகக் கோப்பை நெருங்குவதாலும், போல்ட் உலகக் கோப்பை அணியில் இடம் பெற்றுள்ளதாலும் அவர் இனியும் விளையாடுவது சந்தேகம்தான். இதேபோன்று கோலின் முன்ரோவும் நியூஸிலாந்து அணியில் இருப்பதால் அவர் போட்டிகளில் விளையாடுவாரா என்பது கேள்விக்குறியே ?  அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கீமோ பவுல் மற்றும் ரூதர்போர்டு உலகக் கோப்பை அணியிலும் இல்லை, அவர்களுக்கு கட்டுப்பாடும் இல்லை. எனவே அவர்கள் இறுதிவரை விளையாடுவார்கள். 

ப்ளே ஆஃப் சுற்றில் இடம்பிடித்துள்ள மற்றொரு அணி சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னையை பொருத்தவரை முக்கிய பங்காற்றும் வெளிநாட்டு வீரர்களாக டூ பிளஸிஸ் (தென் ஆப்பிரிக்கா), ஷேன் வாட்ஸன் (ஆஸ்திரேலியா), இம்ரான் தஹிர் (தென் ஆப்பிரிக்கா), டிவெயின் பிரவோ (வெஸ்ட் இண்டீஸ்), சாம் பில்லிங்க்ஸ் (இங்கிலாந்து), மிட்ஜெல் சாண்ட்னர் ஆகியோர் உள்ளனர். 

இவர்களில் டூ பிளஸிஸ் மற்றும் தஹிர் இரண்டு பேருமே தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பை அணியில் இருப்பதால் அவர்கள் சொந்த நாடு திரும்புவார்கள். இதனால் சென்னையின் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டுமே சரியும். ஆனால் வாட்ஸன் உலகக் கோப்பை அணியில் இல்லாததால் அவர் இறுதி வரை விளையாடுவார். சாம் பில்லிங்க்ஸ் இங்கிலாந்து உலகக் கோப்பை அணியில் இடம்பெறாததால் அவர் இறுதிவரை விளையாடுவார். உலகக் கோப்பை அணியில் பிராவோவிற்கு கட்டுப்பாடுகள் இல்லாததால் அவரும் இறுதி வரை விளையாடுவார். ஆனால் மிட்ஜெட் சாண்ட்னர் உலகக் கோப்பை அணியில் இருப்பதால் இறுதிவரை விளையாடுவது சந்தேகம்தான். எனவே சென்னைக்கு ஆல்ரவுண்டர் பிரச்னை இருக்காது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் லஷித் மலிங்கா (இலங்கை), கிரான் பொலார்ட் (வெஸ்ட் இண்டீஸ்), குயிண்டான் டி காக் (தென் ஆப்பிரிக்கா), எவின் லெவிஸ் (வெஸ்ட் இண்டீஸ்), மிட்ஜெல் மெக்லனென் (நியூஸிலாந்து), ஜாசன் பெஹெரெண்டார்ஃப் (ஆஸ்திரேலியா), பென் கட்டிங் (ஆஸ்திரேலியா), பெகுரான் ஹெண்ட்ரிக்ஸ் (தென் ஆப்பிரிக்கா) ஆகியோர் வெளிநாட்டு வீரர்களாக பங்கேற்றுள்ளனர். 

இதில் லஷித் மலிங்கா உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளதால் அவர் விரைவில் நாடு திரும்புவார். அத்துடன் ஜாசன் பெஹெரெண்டார்ஃப் ஆஸ்திரேலிய உலகக் கோப்பை அணியில் உள்ளதால் அவரும் பறந்துவிடுவார். இது மும்பைக்கு பந்துவீச்சில் பெரும் சரிவு தான். குயிண்டான் டி காக் தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பை அணியில் உள்ளதால் அவர் டாடா காட்டிவிட்டு சென்றுவிடுவார். அது பேட்டிங்கில் மும்பைக்கு பெரும் பின்னடைவாக அமையும். அதேசமயம் பொலார்ட் மற்றும் எவின் லெவிஸ் வெஸ்ட் இண்டீஸ் அணி என்பதால் இறுதிவரை விளையாடுவார்கள். அது பெரிய அளவில் சாதகமும் இல்லை, அவர்கள் விளையாடாவிட்டால் பாதகமும் இல்லை.

ஹைதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக இருக்கும் டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா). எனவே அவர் அடுத்த வாரம் சென்றுவிடுவார். ஏற்கனவே மற்றொரு ஓபனிங் பேட்ஸ்மேனான பேரிஸ்டோவ் (இங்கிலாந்து) சொந்த நாடு சென்றுவிட்டார். இருவருமே உலகக் கோப்பை அணியில் உள்ளனர். அத்துடன் கேப்டன் கேன் வில்லியம்ஸன் (நியூஸிலாந்து) உலகக் கோப்பை அணியில் விளையாடுவதற்காக ஓய்வெடுக்கலாம். இதனால் ஹைதராபாத் அணி பேட்டிங்கில் பெரும் சரிவை சந்திக்கும். 


அத்துடன் பந்துவீச்சில் ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்) மற்றும் முகமது நபி (ஆப்கானிஸ்தான்) இருவரும் உலகக் கோப்பை அணியில் இருப்பதால் அவர்கள் சொந்த நாடு சென்றுவிடுவார்கள். ஷகிப் உல் ஹசனும் (பங்களாதேஷ்) உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்துள்ளதால், அவரும் விரைவில் சென்றுவிடலாம். இது பந்துவீச்சிலும் அந்த அணிக்கு பின்னடைவை தரும். இதனால் கண்டிப்பாக ஹைதராபாத் தடுமாற்றத்தை சந்திக்கும். 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பொருத்தவரையில் முக்கிய வெளிநாட்டு வீரர்களாக உள்ளவர்களில் அண்டிரிவ் ரஸல் (வெஸ்ட் இண்டீஸ்) மற்றும் சுனில் நரேன் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் என்பதால் அவர்களுக்கு பிரச்னை இல்லை. அத்துடன் கிரிஸ் லின் (ஆஸ்திரேலியா) உலகக் கோப்பை அணியில் இடம்பிடிக்காததால் அவரும் இறுதிவரை ஐபிஎல் தொடரில் விளையாடுவார்.

அதேபோன்று ஆல்ரவுண்டர் கார்லோஸ் பிராத்வொயிட்-ம் வெஸ்ட் இண்டீஸ் என்பதால் அவரும் இறுதிவரை தொடருவார். லக்கி ஃபர்கிசன் (நியூஸிலாந்து) உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளதால் அவர் மட்டும் விளையாடுவது சந்தேகம். அவர் ஏற்கனவே சில போட்டிகளில் விளையாடவில்லை. எனவே கொல்கத்தா அணிக்கு பெரும் பாதிப்பு இல்லை. 

பஞ்சாப் அணியில் முக்கிய வீரர்களாக கிரிஸ் கெயில் (வெஸ்ட் இண்டீஸ்), டேவிட் மில்லர், நிகோலஸ் பூரான் (வெஸ்ட் இண்டீஸ்), சாம் குரான், ஹர்துஸ் வில்ஜியோன், ஆண்ட்ரிவ் டை உள்ளிட்டோர் உள்ளனர். இதில் கிரிஸ் கெயில் மற்றும் பூரான் ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் என்பதால் இறுதிவரை விளையாடுவார்கள். 

அத்துடன் ஆண்ட்ரிவ் டை ஆஸ்திரேலிய உலகக் கோப்பை அணியில் இல்லை என்பதால் அவரும் சொந்த நாடு திரும்பமாட்டார். ஆனால் காயம் காரணமாக அவர் விளையாடாமல் உள்ளார். வில்ஜியோன் உலகக் கோப்பை அணியில் இல்லை அவரும் தொடர்ந்து விளையாடுவார். ஆனால் டேவிட் மில்லர் மட்டும் பாதியில் சொந்த நாடு பறப்பார். அதுவும் பஞ்சாப் அணிக்கு சிறு சரிவுதான். எனவே இந்த அணிக்கும் பெரும் பாதிப்பு இல்லை.